துாத்துக்குடி அருகே புதுக் கோட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளில் குண்டு வெடிக்கும் வீடியோ வைரலாக பரவியது. அதில் ஒரு குளம் அருகே நாட்டுவெடிகுண்டு வீசப்பட்டு, பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இது குறித்து துாத்துக்குடி ரூரல் ஏ.எஸ்.பி., சந்தீஸ் தலைமையில் புதுக்கோட்டை போலீசார் விசாரித்தனர்.
சம்பவம் நடந்த இடம் புதுக்கோட்டை அருகே உள்ள பிரகாஷ்நகர் குளக்கரை என்பதும், இங்கு வெடித்த வெடிகுண்டு காட்சி தான் வைரலானது என்பதை போலீசார் உறுதி செய்தனர்.இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி வழக்கு பதிவு செய்தார்.
விசாரணையில், 16 வயது சிறுவன் பட்டாசில் உள்ள வெடிமருந்தை தனியாக பிரித்து நாட்டு வெடிகுண்டு போல் தயாரித்து வெடித்ததும், அதனை குரும்பூர் முருகபெருமாள்(23) வீடியோ எடுத்து பதிவு செய்ததும் தெரிந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் சிறுவன் மற்றும் முருகப்பெருமாளை கைது செய்தனர்.