கயத்தாறு பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலத்தை தனி நபர்களுக்கு பட்டா மாற்றம் செய்ய தடை உத்தரவு பிறப்பிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.
இது தொடர்பாக சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.பி. ஆறுமுகம், மாநகரச் செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு:
கயத்தாறு தாலுகா கரடிகுளம் கிராமம் சர்வே எண்கள் 150 முதல் 170 தொடர் எண்களில் உள்ள சுமார் 68 ஏக்கர் நிலத்தை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் கிராம வருவாய் ஆவணங்களிலும் சம்பந்தப்பட்ட விவசாயிகள் பேரிலேயே உள்ளது. இந்நிலையில் 20.6.2022 தேதியில் கழுகுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பாயத்தின்படி எனக் கூறி வடக்கு இலந்தகுலம் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் வெள்ளை பாண்டி என்பவருக்கு கழுகுமலை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கிரய ஆவணம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு எந்த தகவலும் தெரிவிக்காத நிலையில், அடுத்த கட்டமாக 68 ஏக்கரை வருவாய் ஆவணங்களிலும் பெயர் மாற்றம் செய்வதற்கு முயற்சி நடைபெறுகிறது. இதுகுறித்து கயத்தாறு வட்டாட்சியரிடமும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே விவசாயிகளின் விவசாய நிலத்தை பாதுகாக்கும் பொருட்டு விவசாய நிலங்களை வேறு நபர்களுக்கு பட்டா மாற்றம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர். இதில், சிபிஎம் ஒன்றிய செயலாளர் சங்கரன், கயத்தாறு ஒன்றிய செயலாளர் சாலமன், மாவட்ட குழு உறுப்பினர் எம்எஸ் முத்து மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.