பெண்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். மேலும், தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்று சைபர் குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேசியஸ் எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் தற்போது 449 பெண் பயிற்சி போலீசார் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி போலீசாருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் தலைமை தாங்கி பேசினார். அப்போது, பெண்கள் சமூக வலைதளங்களை மிக கவனமுடன் கையாள வேண்டும். தேவையில்லாமல் தங்களது புகைப்படங்கள் மற்றும் சுயவிவரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்ற கூடாது. அதன் மூலம் உங்கள் புகைப்படங்கள் திருடப்பட்டு குற்றங்கள் நிகழ வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத செயலிகள் மேலும், ஆன்லைனில் வரும் லிங்குகள் மூலம் தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதன் மூலம் உங்களது சுயவிவரங்கள் மற்றும் வங்கி கணக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் திருடப்பட்டு உங்கள் பணம் மோசடி நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் வங்கி அலுவலர் போல் பேசி உங்களது ஏ.டி.எம் கார்டு விவரங்களை கேட்டறிந்து அதன் மூலம் உங்கள் பணம் மோசடி செய்யப்படலாம். சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது எப்போதும் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆய்வாளர்கள் சுதாகரன், அச்சுதன், போலீஸ் பயிற்சி பள்ளி முதன்மை சட்ட போதகர் ஆய்வாளர் ஜான்டஸ் பாபுனி, உதவி ஆய்வாளர்கள் பச்சமால், ஜேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.