தூத்துக்குடியில் டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளரை கத்தியைக் காட்டி மிரட்டி இரண்டு சக்கர வாகனத்தை பறித்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தெற்கு சங்கரபேரியைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் உத்தண்டு முருகன் (22), இவர் தூத்துக்குடி - மதுரை பைபாஸ் ரோட்டில் சொந்தமாக டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். நேற்றிரவு வேலை முடிந்து ஜோதி நகர் விலக்கு அருகே உள்ள எம்ஆர்எப் டயர் கம்பெனி அருகே வரும்போது கருப்பு கலர் பல்சர் பைக்கில் வந்த மர்ம நபர்கள் கத்தி மற்றும் அருவாளை காட்டி மிரட்டி முருகனின் இருசக்கர வாகனத்தை பறித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து அவர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் வாகன சோதனையில் ஈடுபட்டபோது பைக்கை பறித்துச் சென்ற, பிரையண்ட் நகர் 4வது தெருவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் சதீஷ் என்கிற மோசஸ் (21), குருவி மேடு, பிரையண்ட் நகர் 12வது மேற்கு பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் கருப்பசாமி (19) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.