மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44 செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விளாத்திகுளம் வட்டார அளவிலான மாணவ, மாணவியர்களிடையேயான செஸ் போட்டிகள் , குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 10-ம் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. முதன்முறையாக தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, தமிழ்நாடு அரசின் சார்பில் இப்போட்டி குறித்த விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களிடையே செஸ் போட்டிகள் நடத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பேருந்துகள், ரயில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் இச்சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விளம்பரம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று, விளாத்திகுளம் வட்டார அளவிலான மாணவ, மாணவியர்களிடையேயான செஸ் போட்டிகள் , குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாணவர்களுக்கு, தேவையான உணவு வசதிகளை குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபாண்டி தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்து கொடுத்ததோடு, சதுரங்க போட்டிகளையும் பார்வையிட்டார்.