தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுபடி நகர காவல் உதவி கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்தீஸ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது தருவை மைதானம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில், அவர் தூத்துக்குடி மில்லர்புரம் சிலோன் காலனியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் யோக பிரகாஷ் (25) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே போலீசார் பிரகாஷை கைது செய்து அவரிடமிருந்த 250 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.