தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாமை அமைச்சர் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியில் அமைந்துள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. முகாமை மேயர் ஜெகன், ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், 2வது தவணை தடுப்பூசி செலுத்தி ஆறு மாத காலம் நிறைவுற்ற 18வயது நிரம்பிய தகுதி உடைய அனைவருக்கும் கரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸை இலவசமாக 15.072022 முதல் 30.09.2022 வரை அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்க அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்த மக்கள் தொகை 4,23,682ல் 3,01,746 பேர் 18வயது கடந்தவர்கள் ஆவர், இவர்களில் 91% முதல் தவணை தடுப்பூசியும் 83% பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் 60வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களில் 5,216-பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 2வது தவணை தடுப்பூசி செலுத்திய 18வயதிற்கு மேற்பட்டவர்களில் 1,25,000பேர் தற்போது இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி உடையவர்களாக உள்ளனர். கரோனா வைரஸ் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதிலும், உயிர் இழப்புக்களையும் தடுப்பதில் தடுப்பூசிகள் மிகப்பெரிய அளவில் செயல்படுகின்றன என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர நகர் நல அலுவலர் அருண்குமார், பொதுசுகாதார அலுவலர்கள், சூரிய பிரகாஷ், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி தங்கம், மாநகராட்சி கவுன்சிலர்கள் தேவேந்திரன், கற்பக கனி மற்றும் செவிலியர்கள் மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.