குளத்தூரில் கண்மாயில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு பாஜக விளாத்திகுளம் தெற்கு ஒன்றியம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய பாஜக பொதுச்செயலாளர் லிங்கராஜ் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், குளத்தூர் வடக்கு கண்மாயில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூலை 6-ம் தேதி (6.7.2022) வரை தொடர்ச்சியாக சரளை மண் மற்றும் கரம்பை மண் இராட்சத இயந்திரங்களைக் கொண்டு கனரக வாகனங்களில் அள்ளப்பட்டு வந்தது. அள்ளப்படும் மண் உப்பளங்கள், கம்பெனிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பல லட்சங்களுக்கு விற்கப்பட்டது. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் குளத்திலிருந்து மண் எடுக்கப்பட்டது. சுமார் 50 அடிக்கு அதிகமாக, நீர் ஊற்று வரும் அளவிற்கு மண் தோண்டப்பட்டுள்ளது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஒரே சீராக இல்லாமல் ஆங்காங்கே அதள பாதாளமாக தோண்டப்பட்டுள்ளது.
இதனால் தண்ணீர் பெருகும் காலத்தில் இந்த பாதாள குழியில் அறியாத சிறுவர்கள், மனித உயிர்கள் பழியாக கூடிய அபாயம் உள்ளது. இதுமட்டுமின்றி கால்நடைகளும் அந்த குழியில் விழுந்து இறக்க வாய்ப்புள்ளது. டெண்டர் முடிந்த பின்னரும் பொக்லைன் போன்ற இராட்சத இயந்திரங்கள் இன்னும் கண்மாயை விட்டு வெளியேறவில்லை. இரவில் மண் திருடுவதற்காக நிறுத்தியிருக்க வாய்ப்புள்ளது.
இத்தனை முறைகேடுகள் நடந்து கொண்டிருந்தாலும் மண் அள்ளுபவர்கள் தி.மு.க அரசியல்வாதிகளின் பினாமிகள் என்பதால் அரசு அதிகாரிகள் இந்த முறை கேட்டை கண்டுகொள்ளவில்லை. எனவே மதிப்பிற்குரிய அய்யா அவர்கள் இதனை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் தமிழ்நாடு அரசு மிகவும் கடனில் தத்தளிக்கும்போது கோடிக்கணக்கில் வருமானம் வரும் கனிம வளத்தை அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் பினாமிகள் சொற்ப தொகையை அரசுக்கு செலுத்திவிட்டு அத்தனை கனிம வளத்தையும் கொள்ளையடித்துச் செல்வது எந்த விதத்தில் நியாயம். இவற்றை பாதுகாக்க வேண்டிய அரசு அதிகாரிகளும் இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருப்பது வேதனையாக உள்ளது.
எனவே தனிநபர் கொள்ளையடிக்க வழிவகுக்காமல் அரசுக்கு வருவாய் வரும்படி திட்டமிடவும், கனிமவள முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறுப்பட்டுள்ளது.