தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மேலாளர் சுமதி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவனம் உரிய அனுமதியை பெற்று தொடங்கப்பட்டது. மக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு இந்த நிறுவனம் மூடப்பட்டது. மேலும் இந்த நிறுவனத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு அவசர கால நிலையைக்கூட செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.
அங்கு ஆசிட், ரசாயனம் மற்றும் ஆபத்தான பல மூலப்பொருள்கள் உள்ளன. அவசர கால நிலைக்கு குறைந்த அளவு மின்சாரம் வழங்கக் கோரி அளித்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா 2-ம் அலையின் போது மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. இதற்காக உள்ளூர் உயர்மட்டக்குழு அனுமதி பெற்று 250 ஊழியர்கள் பணியாற்றினர். தற்போது ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெயை வெளியேற்றவும், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் எந்திரங்களை சரி செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்கப்பட்டு, நிலுவையில் உள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக பயன்படுத்திய எண்ணெய், மூலப்பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றை வெளியேற்ற அனுமதித்து இடைக்கால உத்தரவிட வேண்டும். மேலும் இந்த ஆலையில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற அனுமதி அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் உரிய பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்