தூத்துக்குடியில் 4 நாட்களாக நடைபெற்ற நெய்தல் கலை விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளருமான கனிமொழி முன்னெடுப்பில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் நெய்தல் கலை விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தமிழர்களின் பண்பாடு, கலை, கலாச்சாரம், நாகரீகத்தை பறைசாற்றும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 300 கிராமிய கலைஞர்கள் பங்கேற்று கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
நாதஸ்வரம், தவில், கும்மியாட்டம், கோலாட்டம், பறையாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, குச்சியாட்டம், சூபி பாடல்கள், ஜிம்காட்டம், சிலம்பாட்டம், களியலாட்டம், களறி போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று விடிய, விடிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதனை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.
கடைசி நாளான இன்று ( ஞாயிற்றுகிழமை ) சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கணியான் கூத்து, சூபி இசை நிகழ்ச்சி, பம்பை கைச்சிலம்பம், களியில், பறையாட்டம், இசை நிகழ்ச்சி போன்றவை நடந்தன. கலைநிகழ்ச்சிகள் மட்டுமின்றி பாரம்பரிய உணவு அரங்குகள், மகளிர் குழுவினர் மற்றும் கைவினை கலைஞர்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான அரங்குகள், புத்தக விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இவைகளை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
நிறைவு விழாவுக்கு கனிமொழி எம்.பி தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சிறப்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் கனிமொழி எம்.பி. சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் கடைசி இரண்டு நாட்கள் நெய்தல் கலை விழாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.