தூத்துக்குடியில் நான்கு நாட்கள் நடைபெறும் நெய்தல் கலை விழாவில், நேற்று மூன்றாவது நாளில், வ.உ.சி கல்லூரி மைதான திடலானது கடல் போல மக்கள் தலைகள் நிறைந்து களை கட்டி கானப்பட்டன.
தமிழர்களின் தொன்மையையும் சிறப்புகளையும் ஒரே இடத்தில நிகழ்த்தும் கலைத் தொகுப்பு. சங்க காலம் தொட்டு நம் தமிழ்ச் சமூகம் போற்றிப் பாதுகாத்த பல்வேறு கலை வடிவங்கள், மற்றும் உணவு முறை ஆகியவற்றை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் ஒரு பிரமாண்ட விழா
தமிழ் மக்களின் வாழ்வியலை சொல்லக்கூடிய மரபு சார்ந்த, தமிழ் பாரம்பரிய கலைகளை பாதுகாக்க, அடுத்த தலைமுறைகளுக்கு அதன் பெருமைகளை எடுத்துச்செல்ல, எழுத்து, கலை, தமிழ் பாரம்பரியம் ஆகியவற்றின் மீது தீராத காதல் கொண்டு இயங்கி வரும், ஓய்வறியா சூரியன் இல்லத்தில் உதித்த, நெய்தல் நிலம் வாரிக்கொண்ட முத்து, முத்துவேல் கருணாநிதி தன் இல்ல உரையில் எழுதிய தமிழ் மொழியில் கனிந்த மொழி, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியின் முன்னெடுப்பில், 300 க்கும் மேற்பட்ட கலைஞர்களின் பங்கெடுப்போடு, 'நெய்தல் - தூத்துக்குடி கலை விழா' தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் 07.07.2022 அன்று தொடங்கி 10.07.2022 அன்று வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
குறுகிய கால இடைவெளியில், விழா தோரணை அமைப்பில் பிரம்மாண்டம் இல்லாது இருப்பினும், மண்பானை சமையல், இலங்கை தமிழர் பாரம்பரிய உணவு அரங்கு, தூத்துக்குடி மீனவன் கடல் உணவகம், கொங்கு நாடு உணவு, இயற்கை இளநீர் சர்பத், மதுரை பேமஸ் ஜிகர் தண்டா, முத்துநர் முத்துக்கள், பனைப் பொருட்கள் என ஒரு புறம் உணவு திருவிழா அரங்குகளும்
தோடர் பழங்குடியினர் அரங்கு, காணி பழங்குடியினர் அரங்கு, காயல் கூடம், கோ ஆப் டெக்ஸ், விழுதுகள் வேளான் விளை பொருட்கள், மண்பாண்ட பொருட்கள் என மறுபுறம் கைவினை பொருள் கண்காட்சி அரங்குகளும் வரவேற்க,
திறந்த வெளி மேடையில், தேவைக்கு ஏற்ப அலங்கார வண்ண மய மின் விளக்குகள் ஒளிர, மிகப் பிரம்மாண்டமான முறையில், நாதஸ்வரம், நையாண்டி மேளம், காவடி, கரகம், சூஃபி பாடல்கள், பறையாட்டம், ஜிக்காட்டம், புலியாட்டம், சின்னப்பொன்னு, செந்தில் - இராஜலெட்சுமி தம்பதி இசைக்கச்சேரி, கும்மியாட்டம், கோலாட்டம், கொயர் இசை, களரி, ஜிம்பளா மேளம், பொய்கால் குதிரை, சக்கைக்குச்சி ஆட்டம், வில்லுப்பாட்டு, துடும்பாட்டம், சிலம்பாட்டம், கைச் சிலம்பம், கூத்து, ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைகள் அரங்கேற்றம் செய்து பொதுமக்களை ஆர்பரித்து ரசிக்க வைத்தன.
கடந்த ஜூலை 7ம் தேதி தொடங்கிய நெய்தல் கலைவிழா முதல் இரண்டு நாள்கள் பொதுமக்கள் வருகை குறைந்த அளவிலே கானப்பட்டதால், விழாவின் நோக்கமே நிறைவேறாமல் போகக்கூடிய சூழல் நிலவியது. பொதுமக்களின் குறைந்த வருகை குறித்து ஊடகங்களும் நெய்தல் விழாவின் நிலை குறித்து செய்திகள் வெளியிட்டன. இத்தகைய சூழலை புரிந்து கொண்ட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, உடனடியாக பொதுமக்களுக்கு ஓர் அழைப்பு செய்தியை வெளியிட்டார்.
அதில், "தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி மண் சார்ந்த கலைஞர்களின் கலை வாழ்க்கை முறையினையும், கலைஞர்களின் கலை சிறப்பையும் அனைத்து தரப்பினரும் அறிந்திடும் வகையிலான நெய்தல் திருவிழாவில் பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று சிறப்பித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என அழைப்பு விடுத்தார்.
அதனையடுத்து, முதல் இரண்டு நாள் களையிழந்த விழா, மூன்றாவது நாள் வ.உ.சி கல்லூரி மைதான விழா திடலானது கடல் போல மக்கள் தலைகள் நிறைந்து களை கட்டி கானப்பட்டன. இதற்கு ஒரு வகையில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமியும் முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.
ஏனென்றால், பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகள், கோரிக்கைகளை மக்கள் பிரதிநிதிகள் முன் வைக்கும் போது, நடவடிக்கை எடுக்கிறேன் என்று கடந்து போவதை மட்டுமே பார்த்து பழகியவர்களுக்கு, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியோ தனது கவனத்திற்கு வரக்கூடிய தூத்துக்குடி மாநகர் மக்களின் பிரச்சனைகள், கோரிக்கைகளை உடனடியாக தீர்த்து வைப்பதையே தனது முதல் பணியாக கொண்டு செயல்படுவதை கானும் பொதுமக்கள் தங்கள் மனதில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு தனியிடம் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி தான், அவர் அழைப்பை ஏற்று மூன்றாம் நாள் நெய்தல் விழாவில் கூடிய கூட்டம் என்று சொல்லலாம்.
கனிமொழி எம்பியின் முன்னெடுப்பிலான தூத்துக்குடி நெய்தல் கலை விழா, நைதல் ஆகும் நிலையில், மேயர் ஜெகன் பெரியசாமியின் தோள் கொடுப்பால் மூன்றாம் நாளில் களைகட்டி மீண்டெழுந்து பிரம்மாண்டமானது என்றே சொல்லலாம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.