தூத்துக்குடியில் பிணைப்பத்திரத்தை மீறி குற்ற வழக்கில் ஈடுபட்ட ரவுடிக்கு குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படி சிறை தண்டனை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த சாலமோன் மகன் பெரியசாமி (44) என்பவரை வடபகாம் காவல் நிலைய போலீசார் கடந்த 27.06.2022 அன்று குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப் பிரிவு 110ன் படி தூத்துக்குடி உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தி, நீதிமன்றத்தில் பெரியசாமி என்பவரிடம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் 6 மாத காலத்திற்கு குற்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்து பிணைத் தொகை ரூ.10,000 நிர்ணயம் செய்து அன்றைய தினமே பிணை பத்திரம் எழுதி பெறப்பட்டது.
மேற்படி பிணைப்பத்திரம் பெறப்பட்ட 6 மாத காலம் முடிவதற்குள் கடந்த 02.07.2022 அன்று வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம் பகுதியில் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரிடம் தகராறு செய்து அவரை கத்தி மற்றும் செங்கலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் வடபாகம் காவல் நிலைய போலீசார் பெரியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆகவே தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்பிரிவு 110ன்படி எழுதிப் பெறப்பட்ட பிணைப்பத்திரத்தை மீறி 6 மாத காலம் முடிவதற்குள் மேற்படி பெரியசாமி குற்ற செயலில் ஈடுபட்டுள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பிரேமானந்தன் அவர்களுக்கு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ்; பெரியசாமி மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்பிரிவு 120ன் படி நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதனடிப்படையில் மேற்படி பெரியசாமி மீது குற்றவியல் நடைமுறைச்சட்டம் 122(1)(b)ன்படி 23.12.2022 வரை சிறையில் அடைக்க தண்டனை வழங்கி தூத்துக்குடி உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே பெரியசாமி மேற்படி வழக்கில் 02.07.2022 முதல் பேரூரணி சிறையில் இருந்து வருபவர் சார் ஆட்சியர் வழங்கிய தண்டணையின் படி 23.12.2022 வரை சிறை தண்டனை அனுபவிப்பார்.