விளாத்திகுளம் அருகே காட்டுபறவையான கௌதாரியை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே காட்டுபறவையான கௌதாரியை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய முருகன், அசோக் என்ற 2 சிவில் இன்ஜினியர்களை போலீசார் கைது செய்து வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 2 துப்பாக்கிகள், துப்பாக்கியால் சுடப்பட்ட கௌதாரிகளை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி இ.வி. ரோடு பகுதியை சேர்ந்த முருகனும் மற்றும் பிஅன்டி காலனியை சேர்ந்த அசோக் ஆகிய இருவரும் நண்பர்கள். இருவரும் சிவில் இன்ஜினியர்கள் ஆவர்.
இருவரும் நேற்று ( 7.7.2022 ) வியாழக்கிழமை குளத்தூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட அரசன்குளம் பகுதி காட்டுக்குள்ளே காட்டு பறவையான கௌதாரியை துப்பாக்கியால் சுட்டு பிடித்து வருவதாக குளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையெடுத்து குளத்தூர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை போக்குவரத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது, முருகன், மற்றும் அசோக் இருவரும் துப்பாக்கியினால் சுட்டு கௌதாரிகளை கொண்டு காரில் செல்வது தெரியவந்தது.
இதையெடுத்து முருகன் , அசோக் இருவரையும் குளத்தூர் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2துப்பாக்கி, சுடப்பட்ட 7 கௌதாரிகள் ஆகியவறை பறிமுதல் செய்து விளாத்திகுளம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து வனச்சரக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இருவரும் துப்பாக்கியால் கௌதாரிகளை சுட்டது விசாரணையில் தெரியவந்ததையடுத்து இருவருக்கும் 25, 000 ஆயிரம் வீதம் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அந்த தொகையை கட்டிவிட்டு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
வனம் மற்றும் காட்டுப்பகுதியில் அனுமதியின்றி துப்பாக்கியை பயன்படுத்தி வேட்டையாடிய இருவர் மாலையில் கைது செய்யப்பட்டு, நள்ளிரவில் அபராதம் கட்டப்பட்டு உடனடியாக விடுவிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
விளாத்திகுளம் ஊரக உட்கோட்ட பகுதியில் உள்ள காட்டு பகுதிகளில், தொடர்ந்து பறவைகள், முயல்கள் என விளையாடப்பட்டு வரும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. இது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்து, தவறு செய்பவர்களை பிடிக்க உதவினாலும், குற்றம் செய்தவர்கள் அபராதம் கட்டி உடனே வெளியே செல்வதால், இது போன்ற குற்றங்கள் இப்பகுதியிலே குறையாமல் தொடர்ந்த வண்ணமே உள்ளது என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றன.
வனம் மற்றும் காட்டுப்பகுதியில் பறவை மற்றும் விலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடுபவர்கள் மீது வெறும் அபராதம் மட்டுமின்றி மேல் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இது போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.