• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே அதிமுக கவுன்சிலர் பெயரில் போலி முகநூல் கணக்கு - சைபர் குற்றப்பிரிவில் புகார்!

  • Share on

விளாத்திகுளம் அருகே வி.புதூர் டவுன் பஞ்., 13-வார்டு அதிமுக கவுன்சிலர் பெயரில் "போலி முகநூல் கணக்கு தொடங்கி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய மர்ம நபர் மீது சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வி.புதூர் டவுன் பஞ்., 13-வது வார்டு கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் இருந்து வருகிறார்.

எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்பதால் இவரின் வார்டு பகுதிகளில் அடிப்படை பணிகளை மேற்க்கொள்ள புதூர் டவுன் பஞ்., நிர்வாகம் சரிவர நிதி  ஒதுக்குவதில்லை என்று கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதில் பூ சுற்றி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். 

இந்நிலையில் வி.புதூர் டவுன் பஞ்., பஸ் நிலையம் சீரமைப்பு மற்றும் கால்வாய்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதை  முனிஸ்வரன் சென்று கேட்டபோது. அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் தன்னை தரக்குறைவாக பேசி மிரட்டியதாக குற்றச்சாட்டு கூறினார்.

மேலும், முனீஸ்வரனின் புகைப்படத்தை பயன்படுத்தி அவரது பெயரில் போலி முகநூல் கணக்கு ஒன்றினை உருவாக்கி அதில், "இனிமேல் புதூரில் எந்த ஒரு கான்ட்ராக்ட் கால்வாய் சீரமைப்பு பஸ் நிலையம் சீரமைப்பு சிமெண்ட் ரோடு மற்றும் தார் ரோடு சீரமைப்பு என திமுகவினர் எந்த ஒரு செயல் செய்தாலும் என்னை நேரில் சந்தித்து என்னை கவனிக்கவும் இல்லை என்றால் ஆட்களை வைத்து பணிகளை தடுத்து நிறுத்துவோம்" என்ற ஒரு பொய்யான செய்தியை முனீஸ்வரன் பதிவிடுவது போல மர்ம நபர்கள் முகநூலில் பதிவிட்டு இவருக்கு அவதூறு பரப்பி வருவதாக கூறப்படுகிறது. 

இதனால் பெரும் மன உளைச்சல் அடைந்த அதிமுக கவுன்சிலர் முனீஸ்வரன் இது பற்றி மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் இணைய வழியாக கடந்த ஒன்றாம் தேதி அன்று புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறை சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று காவல்துறை மீது அதிமுக கவுன்சிலர் முனீஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், காவல்துறை சார்பில் உடனடியாக நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் இப்பகுதியிலுள்ள அதிமுகவினரை திரட்டி போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட இருப்பதாக அதிமுக கவுன்சிலர் முனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாழிக்கிணற்றில் நீராட இனி கட்டணம் இல்லை - இன்று முதல் அமலுக்கு வருகிறது

  • Share on