பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள் ளிட்ட, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் தூத்துக்குடி பாளைரோடு வி.வி.டி சிக்னல் அருகே இன்று அறப்போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில், 2021 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., சார்பில், ‘குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிம தொகை வழங்கப்படும்; சமையல் காஸ் சிலிண்டருக்கு, ரூபாய் 100 மானியம் தரப் படும்' என, பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
அக்கட்சி ஆட்சியை பிடித்து ஓராண்டிற்கு மேலாகியும், பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக பா.ஜ., சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, இன்று அக்கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள, 60 மாவட்டங்களின் தலைநகரங்களில் உண்ணாவிர போராட்டம் நடத்துகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில், மாவட்ட தலைநகரான தூத்துக்குடி பாளை ரோடு வி.வி.டி சிக்னல் அருகே அறப்போராட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் நிலையில், தூத்துக்குடியில் மட்டும் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி தராததால் அறப்போராட்டம் நடத்தப்படுவதாக பாஜக வினர் தெரிவித்தனர். மேலும், வி.வி.டி சிக்னலில் இருந்து வ.உ.சி கல்லூரி வரை சாலையின் இருபுறங்களிலும் பாஜக கொடி கம்பங்கள் நடப்பட்டு, சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே பந்தல் அமைத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தொண்டர்களை திரட்டி தூத்துக்குடி மாவட்ட பாஜக அறப்போராட்டத்தை நடத்தியுள்ளது. இவை ஆளும் கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த அறப்போராட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் வாரியர் போராட்டத்தை தொகுத்து வழங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியசீலன் வரவேற்புரையாற்றினார்.
தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் , நெல்லை மாவட்ட பார்வையாளர் நீல முரளி யாதவ், மாநில பொதுக்குழு உறுப்பினர் இச்கிமுத்து, பிரச்சார பிரிவு மாநில செயலாளர் விக்னேஷ், மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பால்ராஜ், ஓ.பி.சி. அணி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ் , விருந்தோம்பல் பிரிவு மாநில செயலாளர் பாலமுருகன், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், ரவிச்சந்திரன், ஆகியோர் சிறப்புரையாற்றினார். தெற்கு மண்டல தலைவர் மாதவன் நன்றியுரையாற்றினார்.