• vilasalnews@gmail.com

விளாத்திக்குளம் பகுதியில் விவசாய நிலங்களை பாழ்படுத்திவரும் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் - ஆட்சியரிடம் விவசாயிகள் மனு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம்,  விளாத்திக்குளம் தாலுகாவிற்குட்பட்ட அருங்குளம், ஜக்கம்மாள்புரம், வள்ளிநாயகபுரம், மந்திகுளம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் புதியதாக காற்றாலைகளை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விளாத்திக்குளம் பகுதி விவசாயிகளுடன் புதிய தமிழகம் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமை வகித்தார். 

பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

விளாத்திகுளம் தாலுகாவிற்குட்பட்ட அருங்குளம், ஜக்கம்மாள்புரம், வள்ளிநாயகபுரம், மந்திகுளம், இலந்தைகுளம், லட்சுமி நாராயணபுரம், விரிசம்பட்டி, நெடுங்குளம், கன்னிமார்குட்டம், தத்தனேரி, துவரந்தை, குறளயம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர்.

மானாவாரி பயிர் சாகுபடியை மட்டுமே நம்பி வாழ்ந்துவரும் இப்பகுதி விவசாய நிலங்களில் தற்போது தனியார் காற்றாலை நிறுவனத்தினர் புதியதாக காற்றாலை நிறுவும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். காற்றாலைகள் அமைப்பதற்காக நில உரிமையாளர்களான விவசாயிகளிடம்  எவ்வித அனுமதியும் பெறாமல் அத்துமீறி இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

காற்றாலை அமைப்பதற்காக அதிக திறன் கொண்ட காற்றாலை என்ஜின்கள் மற்றும் அதற்கான உதிரிப்பொருட்களை கனரக வாகனங்கள் மூலமாக நாள்தோறும் எடுத்து சென்று வருகின்றனர். இந்த கனரக வாகனங்கள் செல்வதற்காக விவசாய நிலங்களுக்கு செல்லும் சாலைகள், நீர்வரத்து கால்வாய்கள், மழைக்கால வெள்ளநீர் ஓடைகள், கண்மாய்கள், கால்நடை மேய்ச்சல் நிலங்கள், நடைபாதைகள், மங்கம்மாள் சாலைகள், கிராமப்புறசாலைகள், கிராமங்களுக்கான இணைப்பு சாலைகள் மற்றும் அரசிற்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை சேதப்படுத்தி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பருவமழையை நம்பி மானாவாரி பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நிலங்களை எல்லாம் அனுமதியின்றி சேதப்படுத்தி வருவதுடன், அந்நிலங்களில் கனரக வாகனங்கள் செல்வதற்கான சரள்மண் அடித்தும் கான்கிரீட் சிமெண்ட் கலவை போட்டும் புதியதாக சாலைகளை அமைத்து வருகின்றனர். இதனால், இந்நிலங்களில் மீண்டும் விவசாயம் செய்யமுடியாத துர்பாக்ய நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படியாக, தனியார் காற்றாலை நிறுவனத்தினர் அப்பாவி விவசாயிகளின் விவசாய நிலங்களை விவசாயமே செய்ய முடியாத அளவிற்கு முற்றிலும் நாசப்படுத்தி வருகின்றனர். இதனால், விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்துவரும் விளாத்திகுளம் தாலுகா பகுதி விவசாயிகள் வரும் காலங்களில் விவசாயமே செய்யமுடியாத அளவிற்கு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு கால்நடைகளுக்கான மேய்ச்சல் தொழிலும் முடங்கியுள்ளது.

விவசாய நிலங்களை பாழ்படுத்துவது குறித்து தட்டிக்கேட்கும் விவசாயிகள், பொதுமக்களை தனியார் காற்றாலை நிறுவனத்தினர் தங்களது நிறுவன பணியாளர்கள் மூலமாக அப்பாவி விவசாயிகள், பொதுமக்கள் மீது போலீசில் பொய் புகார் கொடுத்து வருகின்றனர். அதோடு, தங்களது வாகனங்களை அவர்களே சேதப்படுத்திவிட்டு, விவசாயிகள் மீது வாகனங்களை சேதப்படுத்தியதாக போலீசில் பொய் புகார் கொடுத்து மிரட்டியும் வருகின்றனர்.

காற்றாலைகள் நிறுவுவதற்காக காற்றாலை நிறுவனத்தினர் சமூகவிரோத கும்பல்கள் மூலமாக படிப்பு அறிவில்லாத விவசாயிகளின் விவசாய நிலங்களை போலியான ஆவணங்கள் மூலமாக கையகப்படுத்தி ஒற்றுமையாக வாழ்ந்துவரும் விவசாய கூட்டுக்குடும்பத்தில் தேவையில்லாத குழப்பத்தையும், பிரிவினையையும் ஏற்படுத்தி வருகின்றனர். அத்துமீறி விவசாய நிலங்களை பாழ்படுத்தி வரும் தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு ஆதரவாக வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறையினர் இருந்து வருவது கண்டனத்திற்குரியதாகும்.

அப்பாவி மானாவாரி விவசாயிகளின் விவசாய நிலங்களையும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களையும் தொடர்ந்து முறையான அனுமதியின்றி பாழ்படுத்தி வருவதுடன், கிராமங்களில் தேவையில்லாத சச்சரவுகளை ஏற்படுத்தி வரும் ஜெ.எஸ்.டபிள்யூ. தனியார் காற்றாலை நிறுவனத்தினர் மீது மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும். பாதிக்கப்பட்டுவரும் அப்பாவி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளித்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.

இளைஞரணி நிர்வாகிகள் காமராஜ், கதிரவன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

மடத்தூரில் லாரி புக்கிங் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாரஸ் லாரியை திருடியவர் கைது!

திருச்செந்தூரில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் திருட்டு - மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு!

  • Share on