தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தூத்துக்குடி மீனவன் youtube சேனல் குடும்பத்துடன் நடுக்கடலுக்குச் சென்று மீன் விருந்து சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருவதோடு பெரும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
தூத்துக்குடி மீனவ குடும்பத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 'தூத்துக்குடி மீனவன்' என்ற youtube சேனலை தொடங்கினார்.
தற்போது சுமார் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன் தமிழகத்தின் வெற்றிகரமான யூடியூப் சேனல்கள் ஒன்றாக தூத்துக்குடி மீனவன் திகழ்கிறது.
சாதாரண மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த சக்திவேல், பொருளாதாரத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக வெளிநாடு சென்றபோது அங்கும் ஏமாற்றப்பட்டு நாடு திரும்பினர். பின்னர் தனது உறவினர்களுடன் சேர்ந்து மீன்பிடித் தொழில் செய்து வந்தார்.
பின்னர் பல்வேறு வெற்றிகரமான யூடியூப் சேனல்களை பார்த்து தானும் அதே போல் தூத்துக்குடி மீனவன் என்ற youtube சேனலை தொடங்கினார். கனவா மீன் பிடித்தல், சங்கு எடுப்பது, பனை ஓலையில் மீன் பிடிப்பது, நடுக்கடலில் படகில் மீன் சமைப்பது என கடல்சார் மீனவர்களின் வாழ்க்கையை அழகாக காட்சிப்படுத்திய அவருக்கு சப்ஸ்கிரைபர்கள் குவிந்தனர்.
இதையடுத்து உலகம் முழுவதும் அறியப்படும் நபராக மாறினார். தற்போது அவருக்கு சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பின் தொடர்பவர்கள் உள்ள நிலையில் அவருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத மற்றொரு சம்பவமும் நடைபெற்றிருக்கிறது. வேறு ஒன்றும் இல்லை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தூத்துக்குடி மீனவன் youtube சேனல் குடும்பத்துடன் நடுக்கடலுக்குச் சென்று மீன் விருந்து சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருவதோடு பெரும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
தூத்துக்குடி மீனவன் சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினுடன் நடுக்கடலுக்கு சென்ற கனிமொழி கடலில் பிடித்த மீன்களை பார்த்து மகிழ்ந்ததோடு தனது செல்போனிலும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பிறகு அவர்கள் சமைத்துக் கொண்டு வந்திருந்த மீன் விருந்தை சுவைத்த கனிமொழி தூத்துக்குடி மீனவர்களின் வாழ்க்கை குறித்தும் நெய்தல் விழா குறித்தும் நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்தார். இந்த வீடியோவை தனது youtube பக்கத்தில் பகிர்ந்துள்ள சக்திவேல் தன் வாழ்நாளில் இது மறக்க முடியாத நிகழ்வு எனக் கூறியுள்ளார். இதில் கனிமொழி மிகவும் எளிமையாக உள்ளார் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.