தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் முனியசாமி என்பவர் அரசு வழங்கிய தனது நிலத்தை விற்பதற்கு ஆட்சேபனை சான்று வழங்க வி.ஏ.ஓ. அலுவலகத்தில் வைத்தே ரூ.3,30,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உமேஷ் குமார் மற்றும் லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகன் ஆகிய இருவரும் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ஜெயஸ்ரீ தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கி தற்போது கைதாகியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூர் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவருக்கு அவரும், அவருடைய குடும்பத்தினரும் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சுமார் 11 ஏக்கர் நிலத்தை அரசு கடந்த 2004-ஆம் ஆண்டில் முனியசாமியின் பெயருக்கு இலவச பட்டாவாக வழங்கியுள்ளது. அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை 14 ஆண்டுகளுக்கு பின் விற்றுக்கொள்ளலாம் என்பதன் அடிப்படையில், தற்போது அந்த நிலத்தை விற்பதற்கு கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் ஆட்சேபனைச் சான்றுக்கு விண்ணப்பித்துள்ளார்.
கோட்டாட்சியரின் பரிந்துரையின் பேரில், முனியசாமியின் மனு குளத்தூர் வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகனின் பார்வைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் முனியசாமிக்கு சொந்தமான சுமார் 11 ஏக்கர் நிலத்தை விற்றுக் கொள்ள ஆட்சேபனை சான்று வழங்க ஏக்கருக்கு ரூ.30,000 விதம் 11 ஏக்கருக்கு ரூ.3,30,000 பணம் லஞ்சமாக கேட்டுள்ளார். வருவாய் ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க மனமில்லாத முனியசாமி தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசரின் வழிகாட்டுதலின்படி முனியசாமி இன்று வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகனுக்கு ரூ.3 லட்சம் பணம் கொடுப்பதற்காக குளத்தூருக்கு வந்து வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகனுக்கு பணத்தினைப் பெற்றுக் கொள்ளுமாறு போன் செய்துள்ளார்.
ஆனால் வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகன் தான் வெளியூரில் இருப்பதாகவும் இந்த பணத்தை குளத்தூர் (கிழக்கு) கிராம நிர்வாக அலுவலர் உமேஷ்குமாரிடம் கொடுக்குமாறும், தான் அவரிடமிருந்து திங்கள்கிழமை வாங்கிக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருடன் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்த முனியசாமி கிராம நிர்வாக அலுவலர் உமேஷ்குமாரிடம் ரூ.3 லட்சம் ரசாயனம் தடவிய பணத்தினை கொடுத்துள்ளார். இதனைடுத்து உடனடியாக பணத்தினை வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உமேஷ்குமாரை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ஜெயஸ்ரீ தலைமையிலான அதிகாரிகள் கைது செய்ததோடு மட்டுமின்றி, வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகனை அருப்புக்கோட்டையில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணைக்காக மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று பின்னர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதாக இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.