திருச்செந்தூரில் நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் பரிதவித்த ஓய்வு பெற்ற இலங்கை அறுவை சிகிச்சை மருத்துவரை யாரென்றே தெரியாமல், அவருக்கு அவசரத்தேவையான மருந்துகளை வாங்கிக்கொடுத்து உதவிய திருச்செந்தூர் காவலரையும், தமிழக காவல்துறையையும் பாராட்டி மேற்படி மருத்துவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார்
இலங்கை, கொழும்பில் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது கோயம்புத்தூரில் வசித்து வரும் டாக்டர் திரு. ராமசுப்பு என்பவர் கடந்த 18.06.2022 மற்றும் 19.06.2022 ஆகிய தினங்களில் திருச்செந்தூர் கோவிலுக்கு குடும்பத்துடன் வழிபாடு செய்வதற்காக வந்து ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.
அப்போது 18.06.2022 அன்று இரவு சுமார் 12.30 மணியளில் மேற்படி ராமசுப்பு அவர்களின் 1 வயதுடைய பேரனுக்கு அதிக வயிற்றுவலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார். இதனால் ராமசுப்பு மருந்து வாங்குவதற்காக விடுதியிலிருந்து வெளியே வந்து மருந்து கடைகளை தேடி அலைந்துள்ளார். நள்ளிரவாகிவிட்டதால் அனைத்து மருந்து கடைகளும் மூடப்பட்டு இருந்ததால் என்ன செய்வதென்று அறியாமல் பரிதவித்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த போலீசாரிடம், தனக்கு அவசரமாக மருந்து வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனடியாக அங்குள்ள ஒரு காவலர், மேற்படி ராமசுப்புவிடம், அவர் யார் என கேட்காமல் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு, தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அவருக்கு தேவையான மருந்து பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.
மேலும் சில மருந்துகள் தேவைப்பட்டதால் அங்கு 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு மூடப்பட்டு இருந்த மருந்து கடையின் உரிமையாளரை உடனடியாக தொடர்பு கொண்டு, கடையை திறக்கச் செய்து ராமசுப்புவுக்கு தேவையான மருந்துப்பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் மருந்து பொருட்கள் வாங்கிய பிறகு மேற்படி ராமசுப்புவை, அவர் தங்கியிருந்து விடுதிக்கே தனது இருசக்கர வாகனத்தில் கொண்டுபோய் இறக்கி விட்டுள்ளார். ராமசுப்பு இறங்கிய பிறகு, உதவி செய்த காவலரிடம் தாங்கள் யார் என்று கேட்ட போது, மேற்படி காவலர் தன்னுடைய பெயர் சிவா என்று மட்டும் கூறிச்சென்றுள்ளார்.
அதனால் வியந்துபோன மேற்படி டாக்டர் ராமசுப்பு அந்த காவலரின் மனித நேயத்தையும், தன்னலமற்ற சேவை மனப்பான்மையையும் பாராட்டியதோடு, தமிழக காவல்துறையையும் பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
மேற்படி பாராட்டுக் கடிதம் கண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்படி உதவிகள் செய்த காவலர் யாரென்று விசாரித்தபோது, அவர் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலைக் காவலர் சிவா தங்கதுரை என்பது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மேற்படி காவலர் சிவா தங்கதுரையை வெகுவாக பாராட்டினார்.
மேற்படி காவலர் செய்த சேவையை பாராட்டி மருத்துவர் ராமசுப்பு அவர்கள் கடிதம் அனுப்பிய பிறகுதான் மாவட்ட காவல்துறை நிர்வாகத்திற்கே தெரியவந்தது. மேற்படி அறுவை சிகிச்சை மருத்துவரின் இந்த பாராட்டுக் கடிதம் உதவி செய்த அந்த காவலருக்கு மட்டுமல்லாமல் தமிழக காவல்துறையில் உள்ள அனைவருக்குமே ஊக்கமளிப்பதாக உள்ளது. ஆகவே மேற்படி டாக்டர் ராமசுப்பு அவர்களுக்கும் காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நன்றி தெரிவித்துள்ளார்.