தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் அதன் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விதவாக தூத்துக்குடியில் 'நெய்தல் விழா - தூத்துக்குடி கலை விழா' ஜூலை 7 முதல் ஜூலை 10, 2022 வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளதாக, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக மாநில மகளிரணி செயலாளருமான கனிமொழி, நேற்று ( 29.06.2022 ) வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ள நிலையில், தற்போது அவை சில மீனவர் அமைப்பினர் மத்தியில் எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நெய்தல் நிலம் என்பது பண்டையத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன. "வருணன் மேய பெருமணல் உலகமும்" எனத் தொல்காப்பியம் இதுபற்றிக் கூறுகிறது.
தூத்துக்குடி நிலப்பரப்பானது கடலும் கடல் சார்ந்த பகுதிகள், தொழில்கள் நிறைந்து கானப்படுவதால், இதனை நெய்தல் நிலம் என வகைப்படுத்தக்கூடும். அந்த வகையிலே இந்த மண்ணில் நடத்தக்கூடிய கலைவிழாவிற்கு " நெய்தல் விழா " என பெயரிடப்பட்டு ஒரு கலை விழாவை தூத்துக்குடி மண்ணில் நடத்த கனிமொழி எம்பி விரும்பி செயல்படலாம் என கருதுவதாக ஒருதரப்பினர் கூறினாலும்,
நெய்தல் விழா என பெயர் சூட்டி எங்களை கௌரவப்படுத்துவதாக செய்யப்படும் இந்த பாசாங்கு வேலைகள் எல்லாம் எங்களுக்கு வேண்டாம், அந்த நெய்தல் விழாவில் நெய்தல் மக்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வரலாறு அடிப்படையில் தான் இருக்கவேண்டும். திமுக தலைமை, மீனவர்களின் அரசியல் அங்கீகாரமாகப் பார்க்கப்பட்ட மீன்வளத்துறை அமைச்சர் பதவியை மீனவர்களிடம் இருந்து பிடுங்கி வேறு சமூகத்துக்கு கொடுத்துவிட்டது. இதன் மூலம் மீனவர்களின் அரசியல் அங்கிகாரத்தை திமுக பறித்துவிட்டது என கொதிக்கின்றனர் மீனவர் அமைப்பினர்.
கனிமொழி எம்பி அறிவித்திருக்கும் நெய்தல்விழா குறித்து எந்தவொரு கலைஞர்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள், கலை மற்றும் பண்பாடு சார்ந்து இயங்கக்கூடியவர்கள், மண் சார்ந்த கலை ஆர்வலர்கள், குறிப்பாக நெய்தல் நில மீனவச் சமூகத்தில் கலைஞர்களும், எழுத்தாளர்களும், படைப்பாளிகளும் ஏராளமாக இருக்கும் நிலையில், யாரிடமாவது கலந்து ஆலோசித்து இவ்விழா குறித்த தெளிவுரையை வழங்கியது உண்டா என கேள்வி எழுப்புகின்றனர்.
மண் சார்ந்து கலை விழா நடத்துவதாக கூறும் கனிமொழி, இவ்விழா தொடர்பாக தூத்துக்குடி, நெய்தல் மண்சாந்த கலைஞர்களிடம் இதுவரை எங்கு, எப்போது, யாரிடம் கலந்துரையாடினார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, கனிமொழி எம்பியின் நெய்தல் விழா குறித்த திடீர் அறிவிப்பு பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புவதாக சொல்லப்படுகிறது.
சத்தமில்லாமல் திடீரென வீடியோ பதிவு மூலம் கனிமொழி எம்பி, நெய்தல் விழா அறிவிப்பு செய்த மறு தினமே, கண்டனங்களும் சர்ச்சைகளும் வெடிக்க தொடங்கியுள்ளன.
எப்படியோ நெய்தல் விழா அறிவிப்பு சர்ச்சையானாலும், தொடக்க விழா கோலாகலமாகட்டும்!