• vilasalnews@gmail.com

மனு கொடுக்கவா... தொகுதியின் ஆளும் கட்சி எம்எல்ஏவின் அழுத்தமா... பரபரக்கும் விளதை தொகுதி!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 16 பஞ்சாயத்து தலைவர்கள் பாஜகவில் இணைந்ததாக ஒரிரு தினங்களுக்கு முன்பு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் அறிவிப்புகள் வெளியானது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் கட்சியில் இணைந்ததாக கூறப்பட்ட 13 பஞ்சாயத்து தலைவர்கள் இன்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அரங்கத்திற்கு வந்தனர். 

அவர்கள் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்தனர். அப்போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர்கள் கூறும் போது, மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் தொடர்பாக மனு கொடுக்க சென்றவர்களை பாஜகவில் இணைந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர் என்று கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 51 பஞ்சாயத்துகளில் 16 பஞ்சாயத்து தலைவர்கள் ஒட்டுமொத்தமாக பாஜகவில் இணைந்துவிட்டதாக வந்த  செய்தி விளாத்திகுளம் தொகுதி உட்பட தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய குடைச்சலை கொடுத்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு அதிரடி காட்டி வரும் பாஜகவில், இப்படி ஒட்டுமொத்தமாக பஞ்சாயத்து தலைவர்கள் இணைந்ததாக வந்த செய்தி என்பது ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய அவமானம் என அரசியல் அரங்கில் விமர்சனங்கள் தெறிக்க, தூத்துக்குடி மாவட்டத்தை கவனித்து வரும் கனிமொழி எம்பி  மற்றும்  வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவனின் அரசியல் ஆளுமைக்கு இந்த நிகழ்வுகள் ஒரு மைனசாக பார்க்கப்படுவதாகவும் அரசியல் விமர்சனங்கள் எழத் தொடங்கின.

இதனால், பதறிப்போன விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஏற்கனவே,  தனியார் சோலார் நிறுவன இடத்தில் புகுந்து மிரட்டல் விடுத்த வீடியோ வைரல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதைத் தொடந்து கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன், திமுக தலைமை ஆகியோரின் தொடர் கோபத்திற்கு ஆளாகி வந்த நிலையில், தற்போது தனது தொகுதிக்குட்பட்ட 16 பஞ்சாயத்து தலைவர்கள் ஒட்டுமொத்தமாக பாஜகவில் இணைந்துவிட்ட செய்தி கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியதையடுத்து,   13 பஞ்சாயத்து தலைவர்களை கூட்டிச்சென்று கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரை சந்திக்க வைத்திருப்பதாகவும், மனு கொடுக்கச்சென்றவர்கள் ஏன் கழுத்தில் பாஜக துண்டை அணிய வேண்டும்? ஆகவே, விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ மார்க்கண்டேயனின் அழுத்தத்தின் காரணமாகவே 13 பஞ்சாயத்து தலைவர்களின் இந்த எம்பி, அமைச்சர் உடனான சந்திப்பு என மற்றொரு தரப்பினரால் சொல்லப்படுகிறது. 

எப்படியோ, மொத்தத்தில் இதனை பார்க்கும் போது "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா" என்றுதான் சொல்ல தோன்றுகிறது!

  • Share on

தூத்துக்குடியில் மண் சார்ந்த கலைகளோடு அரங்கேறும் நெய்தல் கலைவிழா - கனிமொழி எம்பி அறிவிப்பு!

விளாத்திகுளம் : கருவேல மரங்களை வெட்டும் போது தகராறு - ஒருவர் கைது!

  • Share on