தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் அதன் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விதமாக தூத்துக்குடியில் 'நெய்தல் விழா - தூத்துக்குடி கலை விழா' ஜூலை 7 முதல் ஜூலை 10, 2022 வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளதாக, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக மாநில மகளிரணி செயலாளருமான கனிமொழி, வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :
கலையும் இலக்கியமும் நம்முடைய வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கமாகவே எப்பொழுதும் இருந்திருக்கிறது. நம்முடைய மக்களுடைய வாழ்க்கையை அந்த வாழ்க்கையில் இருக்கக்கூடிய அழகான விஷயங்களை எடுத்துச்சொல்லக் கூடிய மண் சார்ந்த கலைகள், அந்த நிகழ்வுகளின் ஒரு விழாவை வரக்கூடிய ஜூலை 7 முதல் ஜூலை 10ம் தேதி வரை தூத்துக்குடியிலே நெய்தல் திருவிழாவாக - தூத்துக்குடி கலைவிழாவாக நடத்த இருக்கிறோம்.
கலை விழாவோடு உணவு திருவிழாவும் நடைபெற இருக்கிறது. 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ளக்கூடிய இந்த நிகழ்ச்சியிலே உங்கள் வருகை அவர்களை ஊக்கப்படுத்தும், உங்களது கைத்தட்டல் அவர்களை உற்சாகப்படுத்தும், உங்களுடைய வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.