தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க கான்டிராக்டர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி கான்டிராக்டர்கள் சங்க துணைத்தலைவர் பரமசிவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 25 வருட காலமாக நாங்கள் தொழில் செய்து வருகிறோம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்ட பிறகு நாங்கள் மிகப்பெரும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இந்த தொழிற்சாலையை நம்பி சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் மட்டுமல்லாது எங்களைப்போன்ற எண்ணற்ற தொழில் நிறுவனத்தினர் இருந்து வருகிறோம். இந்த ஆலையால் எந்தவிதமான மாசுபாடுகளும் இல்லை.
ஆலை நிர்வாகம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தது. தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலையை விற்கும் முடிவை அதன் உரிமையாளர் வாபஸ் பெற வேண்டும் என்று கூறினர். அப்போது, தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க தலைவர் தியாகராஜன், ஷிப்பிங் நிறுவனத்தை சார்ந்த கணேசன் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் உடன் இருந்தனர்.