தூத்துக்குடியில் மாலை நேரத்தில் உழவர் சந்தையினை இலவசமாக பயன்படுத்திட அடையாள அட்டை பெற்றுக் கொள்ளுமாறு உழவர் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
"வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் தூத்துக்குடி உழவர் சந்தையில் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலான மாலை நேரக் கடைகள் விவசாயிகளின் விளை பொருட்களான சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்திட அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களின் விளைபொருட்களையும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் மாலை நேரத்தில் உழவர் சந்தையினை இலவசமாக பயன்படுத்தி பயன்பெறுவதுடன், நுகர்வோருக்கும் பயன்படும் வகையில் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) தூத்துக்குடி அவர்களை தொடர்பு கொண்டு அடையாள அட்டை பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.