ஆட்டோ மற்றும் வேன்களில் நிர்ணயிக்கப்பட்ட இருக்கைகளை விட அதிகமான குழந்தைகளை ஏற்றிச்செல்வது சட்டப்படி குற்றம் . போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (27.06.2022) காலை மேலநாட்டார்குளம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகன் ராஜ் (55) என்பவர் தனது ஆட்டோவில் (TN 76 F 5137) 8 பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்றபோது முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வசவப்பபுரத்திலிருந்து செய்துங்கநல்லூர் சாலையில் வேம்படி சாஸ்தா கோவில் அருகில் செல்லும்போது அதிக குழந்தைகளை ஏற்றிச் சென்றதாலும், ஆட்டோவை அஜாக்கிரதையாகவும், வேகமாகவும் ஒட்டிச்சென்றதால் நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் சென்ற பாளையங்கோட்டை ஊத்துபாறை பகுதியைச் சேர்ந்த எல்.கே.ஜி படித்துவரும் ராஜா (37) என்பவரது மகன் செல்வநவீன் (4 ½) என்ற சிறுவன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த முறப்பநாடு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 2 குழந்தைகளை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த செல்வநவீனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்திருப்பதாவது,
பள்ளிக்குச் செல்லும் 4 ½ வயது சிறுவன் விபத்தில் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தத்தையளிக்கிறது. ஆட்டோ ஓட்டுனர்கள் அரசு நிர்ணயித்துள்ள இருக்கைகளை விட அதிகமான பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் செல்லக்கூடாது, செல்போன் பேசிக் கொண்டோ, குடிபோதையிலோ வாகனங்கள் ஓட்டக்கூடாது, வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளையும், மோட்டார் வாகனச் சட்டைத்தையும் தவறாமல் கடைபிடித்து வாகனங்கள் ஓட்ட வேண்டும். பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள், இதர வாகன ஓட்டிகள் வாகனத்தின் கதவுகள் முறையாக பூட்டப்பட்டதை உறுதி செய்த பின்னரே வாகனத்தை இயக்க வேண்டும், ஆட்டோக்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற எவ்வித விபத்துக்களும் நிகழாமல் பாதுகாப்பான முறையில் கவனத்துடன் வாகனங்களை இயக்கவேண்டும் எனவும், போக்குவரத்து விதிகளையும், மோட்டார் வாகனச் சட்டத்தை கடைபிடிக்காமல் மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.