துாத்துக்குடி மாவட்டத்தில், 'சிப்பெட்' கல்வி மையம் விரைவில் துவக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி தொழிற்பேட்டையில், 'சிப்பெட்' என்ற, மத்திய பிளாஸ்டிக்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், 1968ல் துவங்கப்பட்டது. பிளாஸ்டிக்ஸ் தொடர்பான இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் மற்றும் டிப்ளமா படிப்புகள் இங்கு கற்பிக்கப்படுகின்றன.
இந்நிலையில், கிண்டியில் உள்ள சிப்பெட் வளாகத்தில், 59.19 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு அடுக்கு உடைய தொழில்நுட்ப மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தொழில்நுட்ப மையத்திற்கான அடிக்கல் நாட்டி பேசியதாவது:பிளாஸ்டிக் துறை வளர்ச்சியில், சிப்பெட்டின் பங்களிப்பு மிக முக்கியமானது. தமிழகம் வாகன உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. அத்துறைக்கு தேவையான பிளாஸ்டிக் சார்ந்த உதிரி பாகங்கள், மருத்துவத் துறைக்கு தேவையான பிளாஸ்டிக் கருவிகள், வேளாண் துறைக்கு தேவையான பொருட்கள் அனைத்திற்கும், சிப்பெட்டின் பங்களிப்பு இன்றியமையாதது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, பெட்ரொ கெமிக்கல் துறை முக்கிய பங்காற்றி வருகிறது.
இத்துறையின் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. இந்த தொழில்நுட்ப மையத்தால் திறன் பெற்ற தொழிலாளர்கள், இத்துறையில் அதிகம் கிடைப்பர். இதனால், அதிக வேலை வாய்ப்பும் உருவாகும். மேலும், தென் மாநிலங்களில் அதிக சிப்பெட் மையங்களை உருவாக்கும் வகையில், தமிழகத்தில் துாத்துக்குடி மாவட்டத்தில் புதிய மையம் அமைக்கப்படும். கர்நாடகா, குஜராத் மற்றும் ராஜஸ்தானிலும் சிப்பெட் மையம் அமைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.