சாத்தான்குளம் வேலன் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த ராமசங்கு மகன் கருப்பசாமி (எ) சின்னதம்பி (42) என்பவர் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துறைமுகம் பைபாஸ் ரோட்டில் முடுக்குகாடு அருகில் வல்கனைசிங் கடை வைத்து அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை இவர் தலையில் வெட்டு காயங்களுடன் மர்ம நபரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு தூத்துக்குடி நகர காவல் உதவி கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்தீஸ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுமார் மற்றும் தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசாருக்கு சம்மந்தப்பட்டவரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், கொலையுண்ட கருப்பசாமி (எ) சின்னதம்பிக்கும், அவரது கடைக்கு அருகில் வல்கனைசிங் கடை நடத்தி வரும் தூத்துக்குடி 3வது மைல் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் செல்லகுட்டி (எ) குட்டி (27) என்பவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக மேற்படி செல்லகுட்டி (எ) குட்டி என்பவர் கருப்பசாமி (எ) சின்னதம்பியை நேற்று (18.06.2022) இரவு இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் மேற்படி செல்லகுட்டி (எ) குட்டி என்பவரை கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.