• vilasalnews@gmail.com

பள்ளி மாணவனிடம் சாதி ரீதியாக பேசிய பெண் ஆசிரியரின் ஆடியோ வைரல்... தற்காலிக பணி நீக்கம்... விவகாரத்தின் பின்னணி!

  • Share on

விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவனிடம் சாதி ரீதியாக அப்பள்ளியை சேர்ந்த பெண் ஆசிரியர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அப்பள்ளியைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் தற்போது தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை உதவி ஆசிரியராக பணிபுரியக்கூடிய கலைச் செல்வி என்பவர், அப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவருடன் சாதி ரீதியாக பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. 

அந்த ஆடியோவை கேட்ட, சக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்ப்பினரும், சாதி, மதம்,மொழி, இனம்  வேறுபாடுகள் இன்றி, அனைவரும் சமம் என்று, சமூக ஒற்றுமையை மாணவர்களுக்கு போதிக்கக்கூடிய ஆசிரியர்களே, அவர்களிடம் சாதி ரீதியாக பேசி அவர்களது நெஞ்சில் நஞ்சை விதைக்கும் இந்த படுபாத செயல் பேரதிர்ச்சியாக இருப்பதாக கூறி,  அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி விசாரணை மேற்கொண்டு, முதல் கட்டமாக, பள்ளி தலைமை உதவி ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் அப்பள்ளியின் மற்றுமொரு ஆசிரியை மீனா ஆகிய இருவரையும்  தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தொடர் விசாரனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வட்டாரங்களில் விசாரணை மேற்கொண்டதில், பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கிடையே நடைபெறக்கூடிய அதிகார போட்டி காரணமாக, இரு தரப்புகளாக சாதிய எண்ணத்தோடு ஆசிரியர்கள் சிலர் செயல்பட்டு வருவதாகவும், இதற்கு பள்ளியில் பயிலக்கூடிய சில மாணவர்களை இரு தரப்பு ஆசிரியர்களும் பயன்படுத்துவதால் ஏற்பட்ட விளைவின் ஒரு பகுதியே இந்த ஆடியோ விவகாரம் என சொல்லப்படுகிறது.

மேலும், சாதி ரீதியான போக்கு குளத்தூர் பள்ளியில் செல்ல காரணம் என்ன என்பதை விசாரிக்கையில், அங்கு நீண்ட நாட்களாக பணி புரியும் ஒருசில ஆசிரியர்களே காரணம் என சொல்லப்படுகிறது.

அதாவது, நீண்ட நாட்கள் குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தாங்கள் பணி புரிவதால், தங்களுக்கு மேலான பதவி உயர்வில் உள்ள ஆசிரியர்கள் யார் பள்ளிக்கு புதிதாக வந்தாலும், தங்களை அனுசரித்து தான் செல்ல வேண்டும், தங்களை மிஞ்சி இந்த பள்ளியில் செயல்படக்கூடாது என்ற தவறான ஆளுமை எண்ணம் கொண்ட அதிகார போட்டியே இந்த விவகாரத்தின் அடித்தளம் என சொல்லப்படுகிறது.

அது தான் தற்போது, மாணவர்களிடம் ஆசிரியர்கள் சாதிய ரீதியாக பேசி அவர்களிடம் சாதி உணர்வை தூண்டும் அளவிற்கு, ஆசிரியர்களின் போக்கு சென்றுள்ளதை அறிய முடிகிறது.

ஆகவே, சாதி ரீதியாக மாணவர்களிடம் பேசிய ஆசிரியர்களின் தவறான செயலுக்கு, அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டது நின்றுவிடாமல், இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து ஆராய்ந்து, பள்ளியின் ஒட்டுமொத்த ஆசிரியர்களிடம் உரிய விசாரனை மேற்கொண்டு, நீண்ட நாள் பள்ளியில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்களையும் பணியிடை மாற்றம் செய்து, எதிர்காலத்தில் இது போன்ற கசப்பான சம்பவங்கள் பள்ளியில் நடைபெறாத வண்ணம்  தகுந்த நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வாக இருக்க முடியும் என பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வி செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோரது விருப்பமாக உள்ளது.

  • Share on

தடைசெய்யப்பட்ட புகையிலை, கூலிப்ஸ் பாக்கெட்டுகளுக்கு எதிராக அதிரடி ரெய்டு - 19 பேர் கைது...930 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்!

தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் - மாவட்ட காங்கிரஸ் அறிவிப்பு!

  • Share on