• vilasalnews@gmail.com

எட்டயபுரம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல மறுக்கும் பேருந்துக்கள் - பொதுமக்களை திரட்டி ஆர்பாட்டத்திற்கு தயாராகும் அதிமுக!

  • Share on

எட்டயபுரத்திற்கு வரும்  பேருந்துக்கள் மாலை 6 மணிக்கு மேல், பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாமல், பேருந்து நிலையத்திற்கு வெளிப்புறச் சாலையிலே ஏற்றி இறக்கிச் செல்வதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எட்டயபுரத்தை சுற்றிலும் நூற்றுக்கணக்கான கிராமங்களில் வசிக்ககூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் எட்டயபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துக்கள் மூலம் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். 

இந்த நிலையில், தினமும் மாலை 6 மணிக்குள் மேல் பேருந்துக்களானது பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாமல், பேருந்து நிலையத்தின் வெளிப்புறச் சாலையிலே பொதுமக்களை ஏற்றி இறக்கிச் செல்வதாக சொல்லப்படுகிறது. இதனால், எட்டயபுரம் - கோவில் பட்டி சாலையை கடந்து பேருந்து நிலையத்திற்குள் செல்லும் பொதுமக்கள் விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்படுகிறது. மேலும், பேருந்து நிலையத்திற்கு வெளிப்புறச் சாலையில் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்வதால் எட்டயபுரம் - கோவில் பட்டி  பிரதான சாலையில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பலரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

மேலும், தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பேருந்துக்களும், மதுரையில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் நோக்கி செல்லும் பேருந்துக்களும் எட்டயபுரம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாமல், தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையிலே பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டுச் சென்று விடுகின்றன. இதனால், எட்டயபுரம் பைபாஸ் சாலையில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வர ஆட்டோக்களை பயன்படுத்த வேண்டிய சூழல் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. இதற்கு ஆட்டோக்கள் ரூ 50 முதல் 100 வரை கட்டணம் வசூலிக்கின்றன. எட்டயபுரத்தில் இருந்து மதுரை செல்வதற்கே 100 ரூபாய் தான் பேருந்து கட்டணம், ஆனால், பைபாஸ் சாலையில் இருந்து ஒரிரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிலையம் வருவதற்கு 100 ரூபாய் ஆட்டோவிற்கு செலவிட வேண்டியிருக்கிறதே என பொதுமக்கள் நொந்து கொள்கின்றனர்.

எனவே, பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகாதவாறு, எட்டயபுரத்திற்கு வரும்  பேருந்துக்கள் மாலை 6 மணிக்கு மேல் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லவும், தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பேருந்துக்களும், மதுரையில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் நோக்கி செல்லும் பேருந்துக்களும் எட்டயபுரம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இதே கோரிக்கையை எட்டயபுரம் நகர அதிமுக சார்பிலும் முன் வைக்கப்படுகிறது. கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், ஆளும் அரசும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் காலம் தாழ்த்தும் பட்சத்திலோ, தவறும் பட்சத்திலோ, பொதுமக்களை திரட்டி மாபெரும் ஆர்பாட்டம் நடத்தப்படும் என எட்டயபுரம் நகரச் செயலாளர் ராஜ குமார் தெரிவித்துள்ளார்.

  • Share on

அனுமதியின்றி டிப்பர் லாரியில் சரள்மணல் திருடியவர் கைது - 4 யூனிட் சரள் மணல் மற்றும் டிப்பர் லாரி பறிமுதல்!

அதிமுக நிர்வாகி இல்ல திருமணவிழா - கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்

  • Share on