
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பகுதியில் ரூபாய் 35 லட்சம் மதிப்புள்ள 16 ஏக்கர் 61 சென்ட் நிலத்தை மோசடியாக ஆள்மாறாட்டம் செய்து கிரையம் எழுதிக் கொடுத்தவர் கைது.
எட்டையாபுரம் சமஸ்தானம் ராஜஜெகவீரராம முத்துக்குமார வெங்கடேச எட்டப்பநாயக்கர் என்பவருக்கு சொந்தமான எட்டையாபுரம் தாலுகா நக்கலக்கட்டை கிராம சர்வே எண்: 10/2ல் உள்ள 13 ஏக்கர் 97 செண்ட் நிலம் மற்றும் சர்வே எண்: 11/3ல் உள்ள 2 ஏக்கர் 64 செண்ட் நிலம் என மொத்தம் 16 ஏக்கர் 61 செண்ட் நிலத்தை உத்திரபிரதேசம் மாநிலம் ஹைட்டெர்கன்ஜி அர்ப் அலிகன்ஜி, பரேலி பகுதியை சேர்ந்த விஜயபால்சிங் மகன் சுரேந்திரயாதவ் என்பவரின் அங்கீகாரம் பெற்ற பவர் ஏஜெண்டான தூத்துக்குடி மாவட்டம் சேதுராமலிங்கம்புதூர் பகுதியை சேர்ந்த மகாபத்ரா மகன் திலிப்குமார் மகாபத்ரா என்பவர் எட்டையாபுரம் சார்பதிவாளர் அலுவலக கிரைய ஆவண எண்: 980/2005ன் படி 20.07.2005 அன்று கிரையம் பெற்றுள்ளார்.
மேற்படி 16 ஏக்கர் 61 செண்ட் நிலத்தை கிரையம் பெற்ற சுரேந்திரயாதவ் என்பவரிடமிருந்து மனோகரன் மற்றும் ராமசந்திரன் ஆகிய இருவரும் சேர்ந்து எட்டையாபுரம் சார்பதிவாளர் அலுவலக கிரைய ஆவண எண்: 607/2016ன் படி 02.03.2016 அன்று கிரையம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மேற்படி 16 ஏக்கர் 61 செண்ட் நிலத்தை நிலபுரோக்கரான தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ரத்தினபாண்டி மற்றும் இறந்துபோன கடலையூர் லிங்கம்பட்டியை சேர்ந்த காமாட்சி மகன் முருகன் ஆகியோர்களுடன் கூட்டுசேர்ந்து சொத்தை மோசடியாக கிரையம் செய்து லாபம் அடையலாம் என்ற கெட்ட எண்ணத்தில் மேற்படி மனோகரன் சொத்தை கிரையம் பெறுவதற்கு முன்பே சொத்தின் உரிமையாளரான சுரேந்திரயாதவ் என்பவரிடமிருந்து கிரையம் வாங்கியது போல், அவரை போன்று ஆள்மாறாட்டம் செய்து சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மேற்படி நில புரோக்கர் ரத்தினபாண்டி, இறந்துபோன முருகன் ஆகியோர்களுக்கு தெரிந்த தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மூலமாக தூத்துக்குடி கே.வி.கே நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் சண்முகராஜ் (எ) அர்ச்சுனன் (40) என்பவரை சுரேந்திரயாதவ் போன்று ஆள்மாறாட்டம் செய்து, சுரேந்திரயாதவ் என்ற பெயரில் போலியாக பட்டா மற்றும் வாக்காளர் அடையாள அட்டை தயார் செய்து அதனை பயன்படுத்தி மேற்படி சொத்தை கங்கைகொண்டான் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொது அதிகார ஆவணம் 1343/2013-ன்படி 21.05.2013 அன்று மாரியம்மாள் என்பவர் பெயரில் பத்தரபதிவு செய்து கொடுத்துள்ளனர். மோசடி பவர் ஆவணத்தில் ஆள்மாறாட்டம் செய்த விவரம் தெரிந்தே பேச்சிமுத்து என்பவர் சாட்சியாக கையொப்பம் செய்துள்ளார். மேற்படி பத்திர பதிவு பெற்ற மாரியம்மாளின் முகவரி மற்றும் வாக்காளர் அடையாள அட்டையும் போலியானது.
மோசடியாக பவர் பெற்ற மாரியம்மாள் மேற்படி 16 ஏக்கர் 61 செண்ட் நிலத்தை எட்டையாபுரம் சார்பதிவாளர் அலுவலக கிரைய ஆவண எண் 2938/2013ன்படி 25.06.2013 அன்று மேற்படி நில புரோக்கரான ரத்தினபாண்டிக்கு மோசடியாக கிரையம் கொடுத்துள்ளார். கிரையம் பெற்ற ரத்தினபாண்டி அவருக்கு தெரிந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களான முத்துலிங்கம், ஐகோர்ட்துரை, சுந்தரகுமார் மற்றும் ஆனந்த் ஆகிய 4 பேருக்கு கடந்த 16.12.2014 அன்று அடமான கடன் ஆவணமாக பத்திரபதிவு செய்து கொடுத்துள்ளார். மேற்படி கடன் ஆவணம் மோசடியானது என்று தெரிந்தே மேற்படி 4 பேரும் அடமான கடன் பெற்றுள்ளார்கள்.
இதுகுறித்து மேற்படி மனோகரன் தங்களது நிலத்தை ரத்தினபாண்டி, சண்முகராஜ் (எ) அர்ச்சுனன் மற்றும் சிலர் சேர்ந்து கூட்டுசதி செய்து மோசடி செய்துள்ளதாக அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத் க்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தேவி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் காமராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பிச்சையா, சரவணசங்கர், தலைமை காவலர் மாணிக்கம் மற்றும் முதல் நிலை காவலர் சித்திரைவேல் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மேற்படி சொத்தை மோசடியாக கிரையம் பத்திரம் பதிவு செய்ய ஆள்மாறாட்டம் செய்த தூத்துக்குடி கே.வி.கே நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் சண்முகராஜ் (எ) அர்ச்சுனன் (40) என்பவரை இன்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.