வாழ்த்து தெரிவித்து பதாகை வைத்த போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகனும், திமுகவின் இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் நேற்று வெளியானது.
இந்த திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. ரோந்து பணியில் இருந்த போலீசார் உடனடியாக அந்த பதாகையை அகற்றி பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பதாகையை வைத்தவர் திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவரும், தற்போது பெரம்பலூர் தண்ணீர்பந்தல் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவருமான கதிரவன் (வயது 41) என்பது தெரியவந்தது.
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்த கதிரவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாடாலூர் போலீஸ் நிலையத்துக்கும், கடந்த ஏப்ரல் மாதம் தஞ்சாவூர் மண்டலத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட உத்தரவு ஆணையை கூட இன்னும் பெறாமலும், பணிக்கும் செல்லாமலும் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் சிறப்பு உதவி ஆய்வாளர் இளையபெருமாள், பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை என்ற பெயரில் முன் அனுமதி பெறாமல், காவல்துறையின் மாண்பையும், கண்ணியத்தையும் கெடுக்கிற வகையில் உதயநிதி ஸ்டாலின் திரைப்படத்திற்கு விளம்பர பதாகை வைத்த கதிரவன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீஸ் ஏட்டு கதிரவன் மீது தமிழ்நாடு திறந்தவெளி இடங்களை சிதைக்கும் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.