தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மழைநீர் தேங்காத வகையில் மாநகராட்சிப் பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட சாலை பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் வடிகால்கள் அமைத்து வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் ரகமத்துல்லா புரம், ரங்கநாதபுரம் பகுதி மக்கள் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் பகுதி முதல் மேம்பாலம் வரையிலான கடைகளின் வசதிக்காகவும் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு அந்த கால்வாய் ரங்கநாதபுரம் வழியாக பக்கிள்ஓடையில் சேரும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் வடிவமைத்துள்ளது.
இதற்கிடையே தூத்துக்குடி நெடுஞ்சாலைத் துறை மூலம் எட்டயபுரம் சாலையின் பெட்ரோல் பங்க் முதல் கிழக்கு நோக்கி சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி, அருகே அமைந்துள்ள திருமண மண்டபம், எஸ் எம் நைட் கிளப், பால்சன் ஹோட்டல் வரை வடிகால் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள் ஏதும் கிடையாது. குறிப்பிட்ட கடைகள் மட்டும் இருப்பதால் அந்த பகுதியில் உள்ள வீணாகும் தண்ணீர் குழாய் மூலம் எதிர்புறம் மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள வடிகாலில் இணைக்கப் பட்டுள்ளதால் இங்கு வடிகால் ஏதும் தேவையில்லை என மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக பராமரிப்பற்று உள்ள நிலையிலும், தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் முற்றிலுமாக சிதைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்காமல், மக்களின் வரிப்பணங்களை வீணடிக்கும் நோக்கோடு கமிஷன் பெற வேண்டும் எனும் கையூட்டு நோக்கோடு தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலை துறையினர் இவ்வாறான கால்வாய் அமைக்கும் பணிகளை மேற்கொள்வதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர் என சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் தெரிவித்துள்ளார்.