• vilasalnews@gmail.com

தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் மீதான தடையை தமிழக அரசு வேண்டும் - சற்குரு சீனிவாச சித்தர் கோரிக்கை!

  • Share on

"குருவுக்கு செய்யும் சேவை'' என்ற உயர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் தருமபுரம் ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான பட்டினப்பிரவேசத்திற்கு மீதான தடையை நீக்கி தமிழக அரசு உடனடியாக அதற்கான அனுமதியை வழங்கிடவேண்டும் என்று தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து, தூத்துக்குடி, கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி&மஹா காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

மறைந்த தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் இந்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

தந்தையின் வழியில், தமிழகத்தின் முதல்வராக சிறப்பாக ஆட்சி புரிந்து வரும் தாங்கள் அனைத்து மதமக்களையும் அரவணைத்து செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.  தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் என்ற ஆன்மிக நிகழ்ச்சியானது ''குருவுக்கு சிஷ்யர்கள் செய்யும் சேவை'' என்ற வாழ்வின் உயர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் பல நூறு வருடங்களாக பாரம்பரியமாகவே எவ்வித தடைகளும், தடங்கல்களும் இன்றி இறையருளால் இந்துக்கள் அனைவரும் மனம் மகிழும் வகையில் மிகவும் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள்.

இப்படிப்பட்டச்சூழலில், தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியம் முறையில் நடக்கவுள்ள பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனம் குருமகா சன்னிதானம் அவர்களை பல்லக்கில் அமர வைத்து சிஷ்யர்களான மனிதர்கள் தூக்கி செல்வதற்கு திராவிட கழகத்தினர் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்ததை குறிப்பிட்டு மயிலாடுதுறை கோட்டாட்சியர் அதற்கு தடை விதித்துள்ளார் என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

''மாதா, பிதா, குருவே தெய்வம்'' என்பதற்கேற்ப இறைவனை வழிபடுவதும், குருவுக்கு மரியாதை செய்வதும், பெற்றோருக்கு அவரது பிள்ளைகள் பாதம் பணிந்து சேவை செய்வதும் இந்து மக்களின் வழக்கமாகும் என்பதைவிட இதுவே மனித இயல்பாகும். இதன்அடிப்படையிலேயே குருவுக்கு செய்யும் சேவை என்ற வாழ்வின் உயர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் இந்நிகழ்ச்சி பாரம்பரியாகவே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடவுளே இல்லை என்று கூவிவரும் சிலரின் பொறுப்பற்ற பேச்சைக் கேட்டு இதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது இந்துக்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தடையானது சில மூடர்களின் பேச்சை கேட்டு தமிழர்களின் காலகாலமான பாரம்பரிய வழிபாட்டிற்கு முட்டுக்கட்டை போடுவது என்ற ரீதியில் உள்ளது.

எனவே, தங்களின் தலைமையிலான அரசு இதனை உணர்ந்து, பல நூறு வருடங்களாக பாரம்பரியமாக நடைபெற்றுவரும் ''தருமபுரம் ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான பட்டினப்பிரவேசம் மீதான தடையை உடனடியாக வாபஸ் பெற்று அதற்கான அனுமதியை அளித்திடவேண்டும். அதோடு, இந்நிகழ்ச்சியானது குறிப்பிட்டநாளில் குறிப்பிட்டபடி எந்தவிதமான தடைகளும், தடங்கல்களும் இன்றி சிறப்பாக நடைபெறும் வகையில் அதற்கான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வழங்கிடவேண்டும்.

இதன்மூலம் தமிழர் வழிபாட்டின் பாரம்பரியம்மிக்க பெருமைதனை அனைவரும் அறிந்திடுவதற்கு உரிய வழிவகை செய்திடவேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

  • Share on

அதிமுக மாநில அமைப்பு செயலாளராக சி த செல்லப்பாண்டியன் நியமனம் - இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் யை சந்தித்து வாழ்த்து!

மதிமுகவின் 29வது ஆண்டு துவக்க விழா : தூத்துக்குடியில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

  • Share on