தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி கிளைச் சிறையிலுள்ள இரு கைதிகளை விசாரணைக்காக கடந்த 5 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இதில் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு கைதிகளிடம் அவரது உறவினர்கள் செலவிற்கு பணம் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து நீதிமன்ற விசாரணை முடிந்து அங்கிருந்து இரு கைதிகளை பலத்த பாதுகாப்புடன் போலீசார் மீண்டும் பேரூரணி கிளை சிறைக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீசார், இரு கைதிகளையும் அங்கிருந்த நுழைவு வாயில் முன்பு சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டுச்சென்றனர்.
இதனை தொடர்ந்து இரு கைதிகளிடமிருந்த பணத்தை அங்கிருந்த சிறை அதிகாரிகள் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்தக் காட்சியை யாரோ மறைவாக இருந்து செல்போனில் பதிவு செய்தனர்ர். பின்னர் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த காட் சியை பார்த்த டிஜிபி சைலேந்திரபாபு, இது குறித்து சென்னையிலுள்ள சிறைத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் தூத்துக்குடி பேரூரணி கிளைச் சிறையின் உதவி ஜெயிலர் செல்லப்பெருமாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கைதிகளிடம் பணம் வாங்கிய சம்பவத்தை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமலும், கண்டு கொள்ளாமலும் இருந்த ஜெயிலர் ராதாகிருஷ்ணன் திருச்சி மத்திய சிறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட் டார். இந்த சம்பவத்தால் சிறைத்துறை வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.