தூத்துக்குடி மாவட்டத்தில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 64 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) திருவள்ளுவன் தலைமையில் தொழிலாளர் தினத்தன்று மாவட்டம் முழுவதும் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் ஆறுமுகம், சங்கரநாராயணன், ராம் மோகன், சங்கர கோமதி, பால சுப்பிரமணியன், உதவிஆய்வாளர்கள் சூரியன், செய்யதலி பாத்திமா, ஹேமா, சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தொழிலாளர் தினத்தில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் வாகன நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் அல்லது அன்றைய தினம் பணி புரியும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது ஊதியத்துடன் கூடிய மாற்று விடுப்போ அளிக்கப்பட வேண்டும்.
இது போன்ற விதிமுறைகளை கடை பிடிக்காத 27 கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் 31 உணவு நிறுவனங்கள், 6 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 64 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என தூத்துக் குடி தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) திருவள்ளுவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.