• vilasalnews@gmail.com

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு வழக்கை ரத்து செய்ய மதுரை உயர்நீதிமன்றம் மறுப்பு

  • Share on

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு வழக்கை ரத்து செய்ய மதுரை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு

தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் கிராமத்தில் 915 ஏக்கர் விவசாய நிலத்தினை மோசடியான ஆவணங்களை உருவாக்கி நில மோசடி கும்பல் அபகரிக்க முயற்சித்தனர். ஊர் மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உதவி கேட்டு அணுகினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி செய்தது. 

இதனால் ஆத்திரமடைந்த நில மோசடி கும்பலின் ஏற்பாட்டின் பேரில் 06.01.2012 அன்று விஷமிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கனகராஜ் வீட்டின் மீது பெட்ரோல் வெடி குண்டு வீசினர். இதில் கனகராஜ் மனைவியின் தலையில் காயங்கள் ஏற்பட்டது. இது சம்பந்தப்பட்ட வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கின் புலன்விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றுவதாக சட்ட சபையில் அறிவித்தார். 

இந்த வழக்கில் வழக்கறிஞரும் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினருமான டி.மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு ஈடுபட்டிருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது. தனக்கு முன் ஜாமீன் வழங்கிட வேண்டி டி.மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தூத்துக்குடி செசன்ஸ் நீதிமன்றம் 25.04.2022 அன்று தள்ளுபடி செய்தது. இதன் பிறகு சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டி டி.மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதியரசர் ஜி.கே.இளந்திரையன் முன்பாக இன்று (29.04.2022)விசாரணைக்கு வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கறிஞர்கள் எல்.ஷாஜி செல்லன், இ.சுப்பு முத்து ராமலிங்கம், டி.சீனிவாச ராகவன், கே.வாமணன், எஸ்.மோகன் காந்தி, கிஷோர், பாரதி ஆகியோர்கள் ஆஜராகினர். மதுரை உயர்நீதிமன்றம் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை செய்வதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் டி.மைக்கேல் ஸ்டானிஸ் பிரபுவை சிபிசிஐடி போலீசார் கைது செய்வதற்கும் தடை இல்லை என்று உத்தரவிட்டு அடுத்த விசாரணையை 08.06.2022 அன்று ஒத்தி வைத்தது. 

ஒரு வழக்கறிஞர் மீது சாதாரண பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலே அவர் வழக்கறிஞராக பதிவு செய்வதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் பல கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. சட்டம் படித்து முடித்தவர்கள் வழக்கறிஞராக பதிவு செய்யும் எண்ரோல்மெண்ட் கமிட்டி சேர்மனாக டி.மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு உள்ளார். இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தும் அவரது செல்வாக்கையும், பதவியையும் பயன்படுத்தி வழக்கிலிருந்து தப்பித்து கொள்வதை வழக்கமாக வைத்து கொண்டுள்ளார். எனவே இந்த பெட்ரோல் வெடி குண்டு வழக்கிலும் டி.மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு தப்பித்து செல்லாதவாறு சிபிசிஐடி போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை உடனடியாக கைது செய்திட வேண்டும். வழக்கறிஞர்களை நெறிப்படுத்தும் அமைப்பான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் டி.மைக்கேல் ஸ்டானிஸ் பிரபுவின் மீது உரிய நடவடிக்கை எடுத்து முன் உதாராணமாக செயல்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சியின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைத்திடும் வகையில் செயல்பட்டுள்ள டி.மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் உரிய நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் மாண்பினை பாதுகாத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Share on

மறைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து வரலாற்றுத்துறை மாணவர்கள் ஆய்வு செய்ய வேண்டும்!

மாநகராட்சி பாதாளச் சாக்கடை மின் மோட்டார் அறையில் மேயர் ஆய்வு

  • Share on