மறைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு குறித்து வரலாற்றுத்துறை மாணவர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றார் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் எஸ். சுப்பிரமணிய பிள்ளை.
இந்திய வரலாற்று ஆராய்ச்சி கழகம் நிதியுதவியுடன் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், மறைக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்ற தலைப்பில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய கருத்தரங்கை தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது:
வரலாற்றுத் தந்தை என அழைக்கப்படும் ஹெரோட்டஸ் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வரலாற்று குறிப்புகளை உரைநடையாக பதிவிட்டுள்ளார். நமது நாட்டில் விளையும் நறுமனப் பொருள்கள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
பண்டைய காலத்தில் கிரேக்கர்களுக்கும், பாரசீகர்களுக்கும் இடையே நடைபெற்ற போர் வெறும் நாடு பிடிப்பதற்கான போர் மட்டும் அல்ல. அது இரண்டு நாகரீகங்களுக்கு இடையேயான போர் ஆகும். நமது நாட்டில் வரலாற்றுத்துறை மாணவர்களை தவிர மற்றவர்கள் யாரும் வரலாற்றை முறையாக படிப்பது இல்லை.
நமது நாட்டுக்கு வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு நம்மை ஆளத் தொடங்கினர். ஆங்கிலேயேர்கள் நம் நாட்டை விட்டு 1947 ஆம் ஆண்டு சென்ற போதிலும், போர்த்துகீசியர்கள் 1964 ஆம் ஆண்டு வரை கோவாவில் இருந்தனர்.
நமது நாட்டின் சுதந்திர வரலாற்றில் முதல் முறையாக ஆங்கிலேயரை எதிர்த்து குரல் கொடுத்தவர் பூலித்தேவன் தான். 18 ஆம் நூற்றாண்டில் அவர் ஆங்கிலேயருக்கு வரி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும், தென்னிந்தியாவில் நிகழ்ந்த அந்த சம்பவம் குறித்தும், பூலித்தேவன் குறித்தும் வரலாற்று ஆய்வுகளில் போதிய தகவல்கள் இல்லாத நிலை உள்ளது.
இதேபோல, வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையத்தேவன், சுந்தரலிங்கம், வடிவு, வ.உ. சிதம்பரம்பிள்ளை என ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம். எனவே, வரலாற்றுத் துறை மாணவர்கள் பூலித்தேவன் உள்ளிட்ட மறைக்கப்பட்ட தென்னக சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்றார் அவர்.
கருத்தரங்கு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை வகித்தார். தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சந்திரசேகர், திருவனந்தபுரம் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை தலைவர் சுரேஷ், புதுச்சேரி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் சந்தீப் குமார், நாகலாந்து ஜுங்கிபாட்டா ரசு கல்லூரி பேராசிரியர் பெரியசாமி ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில், காமராஜ் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் தேவராஜ், பேராசிரியர்கள் சுப்பிரமணியன், மாரிமுத்து, ரகு ஜெகதீஸ்வரி, அகமது பிலால் மகபூப், பெருமாள், கருப்பையா, மணிகண்டன், வரலாற்றுத் துறை மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் சரண்யா, சந்தனகுமார், செல்வபிரியா, துர்கா, செல்வா, நதீஷ், கவிதா மற்றும் கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.