முடிவைத்தானேந்தல் பகுதியில் 1 ஏக்கர் 23 சென்ட் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக கிரையம் பத்திரம் பதிவு செய்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் கிராம சர்வே எண். 1568/A2ன்படி உள்ள 1 ஏக்கர் 23 சென்ட் நிலத்தை கிரைய ஆவண எண்: 2127/1944ன்படி பெரியமாடன் குடும்பம் மற்றும் சின்னமாடன் குடும்பம் மற்றும் பலவேசமாடன் குடும்பம் ஆகியோர்களிடமிருந்து 25.11.1944 அன்று கணபதியாபிள்ளை மகன் அருணாசலம் பிள்ளை என்பவர் கிரையம் பெற்றுள்ளார். மேற்படி சொத்தை அருணாசல பிள்ளையிடமிருந்து முடிவைத்தானேந்தல் பகுதியை சேர்ந்த அம்பிகைநாதன் பிள்ளை என்பவர் கிரைய ஆவண எண்: 2311/1964ன்படி 03.12.1964 அன்று கிரையம் பெற்றுள்ளார். மேற்படி கிரையம் பெற்ற சொத்தை அம்பிகைநாதன் பிள்ளை அவரது மனைவி வள்ளியம்மாளுக்கு கடந்த 01.03.1978 அன்று உயில் ஆவண எண்: 18/1978ன்படி உயில் எழுதி கொடுத்துள்ளார். அம்பிகைநாதன் பிள்ளை இறப்பிற்கு பின் வள்ளியம்மாள் மேற்படி சொத்தை கடந்த 09.10.1991 அன்று உயில் சாசன ஆவண எண்: 33/1991ன்படி தனது மகன்களான நடராஜபெருமாள், ஆதிநாராயணன் மற்றும் நமச்சிவாயம் ஆகிய 3 பேருக்கும் சேர்த்து உயில் எழுதி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி 3 பேருக்குமான சொத்தை அவர்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்யாமல் இருந்துள்ளனர். மேலும் மேற்படி சொத்து முடிவைதானேந்தல் கிராம பட்டா எண்: 135ன்படி மேற்படி அம்பிகைநாதன் பிள்ளைக்கு கிரையம் கொடுத்தவரான அருணாசலம் பிள்ளை அவரது தந்தை பெயரான கணபதியாபிள்ளை என்று இருப்பதற்கு பதிலாக அருணாசலபிள்ளை த/பெ. கந்தசுப்பு பிள்ளை என தவறுதலாக பட்டா தாக்கிலாகி இருந்துள்ளது. மேற்படி பட்டாவில் சொத்தின் பழைய உரிமையாளரின் பெயர் இருப்பதையும், அதில் உரிமையாளரின் தந்தை பெயர் தவறுதலாக இருப்பதையும் பயன்படுத்தி மேற்படி சொத்தை மோசடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அருணாசலம் பிள்ளை என்ற பெயரில் தூத்துக்குடி வாகைகுளம் மீனாட்சிபட்டி பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் போலியான வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து சொத்தை ஸ்ரீவைகுண்டம் அணியாபரநல்லூர் பகுதியை சேர்ந்த ராமசாமி மனைவி ராஜேஸ்வரி என்பவருக்கு கடந்த 17.10.2020 அன்று புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக கிரைய பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார். மேற்படி கிரைய பத்திர ஆவணத்தில் ஆள்மாறாட்ட நபரான முருகன் என்பவரின் மகன் அருணாசங்கர் மற்றும் சொத்தை கிரையம் பெற்ற ராஜேஸ்வரியின் கணவர் ராமசாமி என்பவரும் சாட்சி கையொப்பம் செய்துள்ளனர்.
பின்பு மேற்படி சொத்தை கிரையம் பெற்ற ராஜேஸ்வரி அவரது கணவர் ராமசாமி பெயரில் தானசெட்டில்மென்ட் எழுதி கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து சொத்தை தானசெட்டில்மென்ட் பெற்ற ராமசாமி தங்கவேல் என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்தும், பின்னர் அதே சொத்தை தங்கவேல் ராமசாமிக்கு கிரையம் செய்தும் கொடுத்துள்ளார். மேற்படி சொத்தில் வில்லங்கம் உண்டு பண்ணவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் கடந்த 29.11.2021 அன்று ராமசாமி மேற்படி சொத்தை 2 பாகமாக பிரித்து அதில் 50 சென்ட் நிலத்தை தனது மனைவி ராஜேஸ்வரி பெயரிலும், 19.25 சென்ட் நிலத்தை கிருஷ்ணசாமி என்பவர் பெயரிலும் கிரையம் செய்து கொடுத்து மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து அம்பிகைநாதன் மகன் ஆதிநாராயணன் என்பவர் தங்களது சொத்தை ராமசாமி, ராஜஸ்வரி, தங்கவேல், அருணாசங்கர் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் கூட்டுசதி செய்து மோசடி செய்துள்ளதாக அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத்திடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) வனிதா ராணி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் காமராஜ், விஜயகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணசங்கர், முதல் நிலை காவலர் சித்திரைவேல், பெண் தலைமை காவலர் சரஸ்வதி மற்றும் முதல் நிலை காவலர் ஜெயரூபி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மேற்படி சொத்தை மோசடியாக கிரையம் பத்திரம் பதிவு செய்த ஸ்ரீவைகுண்டம் அணியாபரநல்லூர் பகுதியை சேர்ந்த ராமசாமி (52) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (48) ஆகிய 2 பேரையும் இன்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.