தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி நடைபெற்ற சிலுவைப்பாதை வழிபாடு திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.
உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்து இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்துவார்கள். இதில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஏசு கிறிஸ்துவின் தலையில் முட்கிரீடம் அணிவித்து, சிலுவையை சுமக்க செய்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
இதனை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளியன்று ஏசு கிறிஸ்து பட்ட துயரங்களை விளக்கும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் இன்று காலை பங்குத்தந்தை குமாரராஜா தலைமையில் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. இதில் சிலுவையை சுமந்தவாறு உள்ள ஏசுவின் உருவச்சிலையை ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து சென்றனர். 2 ஆண்டுகளுக்கு பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி இந்நிகழ்வு நடத்தப்படுவதால் கிறிஸ்தவ மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.