தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்தாஸ் நகர் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த தமிழரசன் மனைவி இசக்கியம்மாள் (52) என்பவரும் அவரது உறவினர்கள் 11 பேரும் சேர்ந்து இன்று (10.04.2022) நண்பகலில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு செல்வதற்காக டூரிஸ்ட் வேனில் சென்று கொண்டிருக்கும் போது வேன் அய்யனார்புரம் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே வரும்போது நிலைதடுமாறி கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் வேனில் பயணம் செய்த தாளமுத்து நகர் ராம்தாஸ் நகர் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த தமிழரசன் என்பவரது மனைவி இசக்கியம்மாள் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயம்பட்ட 11 பேர்களை காப்பாற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் இறந்த இசக்கியம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்
மேற்படி விபத்தில் காயம்பட்டவர்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.
இந்நிகழ்வின் போது, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ், உதவி ஆய்வாளர்கள் முத்து கணேஷ், சிவகுமார் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.