• vilasalnews@gmail.com

மணி கணக்கில் நீடித்த கூட்டம் - அசாத்திய பதில்... ஆச்சரியமூட்டிய தூத்துக்குடி மாநகராட்சி மேயர்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சியின் முதல் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெற்றது.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அதிமுகவைச் சேர்ந்த கொறடா மந்திரமூர்த்திக்கு மட்டுமே முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால், அதிமுக எதிர்கட்சி தலைவர் வீரபாகு, செயலாளரான அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனின் மகன் எஸ்.பிஎஸ். ராஜா ஆகியோர் முதல் வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும் என அடம்பிடித்தனர்.

 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப் பிரச்னையால் சிறிது தாமதமாகியது. இதையெடுத்து, அவர்களை அழைத்துப் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, தற்காலிகமாக முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கும்படி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

 வழக்கமாக இதுவரை நடைபெற்ற மாநகராட்சி கூட்டங்களில் கொண்டுவரப்படும் தீர்மானம் அனைத்தும் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆளுங்கட்சி கவுன்சிலர்களால் ஆல் பாஸ் என கூறப்பட்டு முடிவுக்கு வந்துவிடும். இந்தக் கூட்டமும் அப்படியே நடைபெறும் என அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் காத்திருந்த நிலையில், கூட்டத்தை தொடக்கி வைத்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி அனைத்து உறுப்பினர்களும் தங்களது பெயர் மற்றும் வார்டு விவரங்களை தெரிவித்து அறிமுகம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.

அறிமுக சம்பிரதாயம் முடிவடைந்ததும் பேசிய அதிமுகவை சேர்ந்த எதிர்கட்சி தலைவரான வீரபாகு, ஸ்டெர்லைட் பிரச்னை, சொத்துவரி பிரச்னை என மாமன்ற கூட்டத் தீர்மானத்தில் இல்லாத பிரச்னைகளை எடுத்து பேசியபடி கூட்டத்தை திசை திருப்ப முயன்றார். அவருக்கு திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் எஸ். சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், ரெக்சிலின் உள்ளிட்டோர் கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்தனர்.

 அவர்களை கூலாக கையாண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, தனது கட்சி மாமன்ற உறுப்பினர்களை அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு வீரபாகுவை பேச அனுமதித்தார். ஸ்டெர்லைட் பிரச்னைக்கு பதில் அளிக்கையில் தனது கட்சி தலைவரும், முதலமைச்சருமான தளபதி ஸ்டாலின் ஒரு போதும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என்ற அறிவிப்பை சுட்டிக் காட்டி வீரபாகுவை வாயடைக்க செய்தார். சொத்துவரி உயர்வு பிரச்னைக்கு காரணமான முன்னாள் அமைச்சர் வேலுமணியின் பழைய அறிவிப்புகளை சுட்டிக் காட்டியதும் வீரபாகு உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் 7 பேரும் வாயடைத்தபடி கூட்டத்தைவிட்டு வெளிநடப்பு செய்வதாகக் கூறி வெளியே சென்றனர்.

இதன் தொடர்ச்சியாக அனைத்து மாமன்ற உறுப்பினர்களையும் பேச வைத்து அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு குறித்து மிகவும் சாதுர்யமாகவும், பொறுமையாகவும் ஒரு தேர்ந்த அரசியல்வாதி போல கூட்டத்தை மேயர் ஜெகன் பெரிசாமி நடத்தியது மூத்த உறுப்பினர்கள் மத்தியில் வியப்பை ஆழ்த்தியது. மாநகராட்சி சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் விரல் நுணியில் வைத்துள்ளாரே என அதிகாரிகளே மூக்கின் மீது விரலை வைத்தனர். 

காலை 10.15 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 12.15 மணிக்கு நிறைவடைந்தது. முதல் கூட்டம் என்பதால் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் என அனைவருக்கும் மதிய உணவு வழங்கியதோடு ஒரு கிலோ இனிப்பையும் வழங்கி மகிழ்வித்தார்.

அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளித்தது, அனைத்து கேள்விகளையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு சாதுர்யமான பதில் அளித்தது, எதிர்கட்சியினரை லாவகமாக கையாண்டது போன்ற செயல்களால் மேயர் ஜெகன் பெரியசாமியின் அரசியல் முதிர்ச்சியை கண்ட மூத்த உறுப்பினர்கள் அனைவரும் அரசியல் பக்குவத்தில் அவரது தந்தையை கண்முன் கொண்டுவந்துவிட்டார் என புகழ்ந்தபடி சென்றனர்.

  • Share on

மாப்பிள்ளையூரணி சுனாமி காலணியில் அங்கன்வாடி மையம் கோரிக்கை: எம்.எல்.ஏ சண்முகையாவுக்கு பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் நேரில் நன்றி தெரிவித்தார்!

சிலிண்டருக்கு இறுதி சடங்கு... கயிறு கட்டி இழுக்கப்பட்ட ஆட்டோ ... தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் நூதன கண்டன ஆர்ப்பாட்டம்!

  • Share on