தூத்துக்குடி யில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆன்மிக அரசியல் வெற்றிபெற வேல்வழிபாடு மற்றும் யாக பூஜை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :
தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பில் இன்றைக்கு 234 தொகுதிகளிலும் ஆன்மிக அரசியல் அணி வெற்றி பெறவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவும் இந்து மக்கள் கட்சி சார்பில் வேல் வழிபாடு மற்றும் யாகம் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் இப்பொழுது அரசியல் சூழ்நிலை மாறி இருக்கிறது. ஆன்மிக அரசியலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. நீண்ட காலமாக திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இந்த ஆன்மிக அரசியல் வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். ஆன்மிக அரசியல் புயல் இப்பொழுது மையம் கொண்டுள்ளது.
திருச்செந்தூர் முருகப்பெருமான் அருளால் இப்பொழுது தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை, அரசியல் மாற்றத்தை உருவாக்கும் ஜனநாயகத்தின் எஜமான்களாகிய வாக்காளப் பெருமக்கள், அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள்.
டெல்லியிலே விவசாயிகள் எனும் பெயரில் இன்றைக்கு பிரிவினைவாதிகளும், பயங்கரவாதிகளும் அந்தப் போராட்டத்திலே ஊடுருவி இருக்கிறார்கள். தமிழகத்தைச் சார்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினைவாதிகளின் போராட்டத்தை வன்முறையை ஆதரிக்கின்ற வகையிலே அறிக்கைகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
தமிழகத்தில் இருந்து பல நபர்களை திமுக ஆதரவாளர்களை போராட்டத்திற்கு அனுப்பி வருகிறது. இது மிகவும் தவறான செயல்.
இந்தியாவில் விவசாயம் செய்கின்ற பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் வாங்கலாம். இதுதான் புதிய வேளாண்மை சட்டம். விவசாயிகளுக்கான ஆதார விலை அது அரசே நிர்ணயம் செய்யணும்.இந்த விளக்கங்களை எல்லாம் அரசாங்கம் கொடுக்கிறது அதேமாதிரி இடைத்தரகர்கள் அந்த முறை ஒழிக்கப்பட வேண்டும் அதற்கும் புதிய வேளாண் சட்டம் வழி வகுக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் வேண்டுமென்றே இடைத்தரகர்களுக்கு ஆதரவாக பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகவும் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.
மத்திய அரசின் ஒரே நாடு ,ஒரே ரேஷன் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசு, அரசியல் சாசனத்தை மீறி இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையிலே பிஜேபி தலைவரின் கார் மீது கல் வீசுகிறார்கள். இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக மம்தா ஒரு வன்முறை அரசியலை நிகழ்த்துகிறார். எனவே மம்தா பானர்ஜியின் அரசை டிஸ்மிஸ் செய்து கவர்னர் ஆட்சியை கொண்டுவர இந்நேரத்தில் கோரிக்கை வைக்கிறோம்.
தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் குறிப்பாக தென் மாவட்ட மக்கள் ரஜினியின் அரசியலை வரவேற்கின்றனர். நடுநிலையை வாதிகள், மாற்றத்தை விரும்புகிறவர்கள் ரஜினியின் பக்கம் அணிதிரண்டு கொண்டிருக்கின்றனர். நிபந்தனையற்ற முறையில் 234 தொகுதிகளிலும் ரஜினிகாந்திற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி செயல்படும்.
ஆன்மிக அரசியல் என்பது யாருக்கும் எதிரானது அல்ல திராவிடத்திற்கு எதிரானது. ஆன்மிக அரசியல் என்பது அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படுவதாகும் என தெரிவித்தார்.