செங்கல் சூளைகளுக்கு உலர் சாம்பல் தருவது நிறுத்தப்பட்டதால் 20 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது - உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர் சங்கத்தினர் பேட்டி
உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தனியார் ஓட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பேசிய உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர் சங்க செயலாளர் சசிதர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் உலர் சாம்பல் உலர் சாம்பல் 20 சதவீதத்தை செங்கல்சூளை நிறுவனத்திற்கு இலவசமாக கொடுத்து வந்தனர். சமீபகாலமாக இலவசமாக தரப்படும் உலர் சாம்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலில் நேரடியாக 50 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
மறைமுகமாக பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர். இவர்களின் மொத்த வாழ்வுமே உலர் சாம்பலை நம்பித்தான் உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு உலர் சாம்பல் தருவதை நிறுத்தியது வேதனை அளிக்கிறது. தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள விதிகளின்படி உலர் சாம்பலை ஏலம் விடுவதற்கு வழிவகை செய்துள்ளனர்.
உலர் சாம்பலை ஏலம் விடுவதனால் சிறு நிறுவனங்கள் தான் பாதிக்கப்படும். இதனால் பெரும் நிறுவனங்களும் பெரும் முதலாளிகளும் லாபம் அடைவார்கள். எனில் உலர் சாம்பல் ஏலம் விடப்படும் போது அதில் கலந்து கொள்ளும் அளவுக்கு சிறு குறு நிறுவனங்களுக்கு நிதி பொருளாதார வசதி கிடையாது. எனவே பெரிய பெரிய சிமெண்ட் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
உலர் சாம்பலை வைத்து செங்கல் தயாரிப்புக்கான முதலீடு மட்டும் தான் சொந்த உழைப்பே தவிர, செங்கல் தயாரிக்க தேவையான 5 வகையான மூலப் பொருள்களையும் வெளியிலிருந்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.
இதில் முக்கிய மூலப்பொருளான உலர் சாம்பலே எங்களுக்கு கிடைக்காது எனில் எங்களின் நிலைதான் என்ன?. சாதாரண சிமெண்டில் 30% உலர் சாம்பலை சேர்த்தால் அது பிசிபி எனப்படும் சிமெண்ட் ரகமாக மாறிவிடுகிறது. உலர் சாம்பலை சேர்க்காவிட்டால் அது ஓசிபி சிமெண்ட் என்றழைக்கப்படுகிறது. இவ்வாறு பெரு முதலாளிகள் லாபம் அடைவதற்காகவும், அரசுக்கு வருமானம் வருவதற்காகவும் சிறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை அடியோடு முடக்க நினைப்பது சரியானதல்ல. என கூறிய அவர், இப்போதே பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தி தொழிலை நிறுத்தி விட்டன. இந்நிலை தொடர்ந்தால் அவர்கள் இனியும் தங்களது தொழிலை தொடர முடியாத நிலை ஏற்படும்.
இந்தியா முழுவதும் 20 ஆயிரம் யூனிட்டுகள் உள்ளது. இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 20 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
தற்போது செங்கல் சூளைக்கு உலர் சாம்பல் தருவது நிறுத்தப்பட்டதிலிருந்து தூத்துக்குடியில் உலர் சாம்பலை வீணாக கடலில் கலக்கின்றனர். மேட்டூரில் குளத்தில் கரைக்கின்றனர். சென்னையில் கடலில் கரைக்கின்றனர். இவ்வாறு நீரில் கரைப்பதை செங்கல்சூளைகளுக்கு தந்தால் தொழில் நிறுவனங்களைக் காப்பாற்ற முடியும். இதற்கு தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.