மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் ராஜாபுதுக்குடியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு காலி குடங்களுடன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி காலி குடங்களுடன் கோசங்கள் எழுப்பினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்தை நடத்தினர். அதனையடுத்து அவர்களது முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் :
ராஜாபுதுக்குடியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனை குறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கேட்டு தற்போது ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றோம். தற்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்து உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.