2020-2021 ஆண்டுக்குரிய பயிர் காப்பீடு இழப்பீடு உடனடியாக வழங்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2020-2021ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து, பாசி, மக்கா, கம்பு, வெள்ளைச்சோளம், பருத்தி, மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி சூரியகாந்தி போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிட்டனர். காலம் கடந்து பெய்த பருவமழையால் பயிர்கள் கடும் பாதிப்பு ஏற்பட்டு விளைச்சல் முற்றிலும் இன்றி போய்விட்டது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்தனர்.
விவசாயிகளுக்கு உதவும் வகையில் கடந்தாண்டு ஏக்கருக்கு ரூ 4000அரசு நிவாரணம் அரசு வழங்கியது. இயற்கை இடர்பாடால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் நஷ்டத்தை ஈடுகட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தை மத்திய மாநில அரசுகள் அறிமுகப்படுத்தியது.
அதனடிப்படையில் பயிர் காப்பீடு இழப்பீடு கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு அரசுகள் வழங்கி வந்தன. கடந்த ஆண்டு கடும் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் பயிர் காப்பீட்டை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர். வழக்கமாக நவம்பர் மாத இறுதியில் பல ஆண்டுகளாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு பயிர் காப்பீடு இழப்பீடு விடுவிக்கப்பட்டு வந்தன. நவம்பர் முடிந்து 4 மாதங்கள் ஆன பின்பும் கிடைக்கவில்லை.
இதனால் விவசாயிகள் செய்வதறியாது திக்கற்ற நிலையில் உள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு மக்காச்சோளம் பயிருக்கு பயிர் காப்பீடு இழப்பீடு பெரும் குளறுபடிக்கு மத்தியில் விடுவிக்கப்பட்டு அநேக கிராமங்கள் இழப்பீட்டில் விடுபட்டுவிட்டன. இதர பயிர்களுக்கு ஒருசில தினங்களில் வழங்கப்படும் என அதிகாரிகள் பல தினங்களாக கூறி வருகின்றனர் இன்னும் வந்தபாடில்லை. மக்காச்சோளம் பயிர் கணக்கெடுப்பு சாகுபடியை மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும் தவிர இதர பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
எனக் கூறி, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத்தொடர்ந்து. விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.