ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தை பற்றிய புலனாய்வு படமாக PEARLCITY MASSACRE (முத்துநகர் படுகொலை) என உருவாகி உள்ளது.
மெரினா புரட்சி படத்தை இயக்கி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த இயக்குநர் எம்.எஸ். ராஜ் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு நீதி கேட்கும் முறையில் கையெழுத்து இயக்கத்தையும் இந்த படக் குழு ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2017 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் நடந்த போராட்டத்தை நாச்சியாள் பிலிம்ஸ் நிறுவனம் 'மெரினா புரட்சி' என்ற ஆவணத்திரைப்படமாக தயாரித்திருந்தனர். M.S.ராஜ் இயக்கியிருந்தார். கடும் போராட்டத்திற்குப் பிறகு தணிக்கை பெற்ற 'மெரினா புரட்சி' நார்வே, கொரிய திரைப்பட விழாக்களில் விருது பெற்றது.
தற்போது நாச்சியாள் பிலிம்ஸும் தருவை டாக்கீஸும் இணைந்து 2018 மே மாதம் 22 & 23 தேதிகளில் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தை PEARLCITY MASSACRE (முத்துநகர் படுகொலை) என்ற பெயரில் புலனாய்வு ஆவணப்படமாக தயாரித்துள்ளனர். மெரினா புரட்சியை இயக்கிய M.S.ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் படத்தை பற்றி இயக்குனர் M.S.ராஜ் கூறுகையில், 'PEARLCITY MASSACRE(முத்துநகர் படுகொலை) புலனாய்வு ஆவணத்திரைப்படம் உண்மையில் மே22 & 23 தேதியில் நடந்த கொடூர சம்பவங்களை சாட்சியங்களுடன் பதிவு செய்திருக்கிறது. மேலும் அரச இயந்திரம் செய்த தவறுகளை ஆதாரங்களுடன் படமாக்கியுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்த ஆவணப்படத்தை திரையிட்டோம். வழியும் கண்ணீரை துடைத்தபடியே படத்தை பாராட்டியவர்கள் விரைவில் நீதி வழங்க வேண்டும் என்று கோரி கையெழுத்திட்டனர் என நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும், தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் (32 நாடுகளில்) இந்த படத்தை திரையிட்டு பார்வையாளர்களின் கையெழுத்துக்களை திரட்டி தமிழக அரசிடம் வழங்க இருக்கிறோம். நீதி கோரும் எங்களின் இந்த முயற்சிக்கு,இந்த பயணத்திற்கு ஊடகவியலாளர்களின் ஆதரவை பணிவுடன் வேண்டுகிறோம்.' என கேட்டுக்கொண்டார்.