ஸ்ரீவைகுண்டம் அருகே அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் மகேஷ் (32) என்பவரும் ஸ்ரீவைகுண்டம் அம்மாள்பட்டி பகுதியைச் சேர்ந்த சண்முகையா பாண்டியன் ஆகிய இருவரும் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஒன்றாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 26ம் தேதி இருவரும் வேலை முடிந்து வரும்போது சண்முகையா பாண்டியன், மகேஷ் என்பவரை பேசுவதற்காக ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பகுதிக்கு அழைத்துள்ளார்.
இதனையடுத்து மகேஷ் மற்றும் அவரது நண்பர் கருப்பசாமி ஆகிய இருவரும் சென்று பத்மநாபமங்கலம் பகுதியிலுள்ள ஒரு கல்குவாரியில் வைத்து சண்முகையா பாண்டியனிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கு வந்த சண்முகையா பாண்டியனின் உறவினரான பத்மநாபமங்கலம், பொன்னன்கால்புரம் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் மகன் வைகுண்டம் (45) என்பவருக்கும், மகேஷ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த வைகுண்டம், சண்முகையா பாண்டியன் மற்றும் சிலர் சேர்ந்து மகேஷிடம் தகராறு செய்து அரிவாள் கைப்பிடியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மகேஷ் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து வைகுண்டம் என்பவரை கைது செய்தார்.
மேலும் போலீசார் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட வைகுண்டம் மீது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது.