முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து கடந்த 6 மாதமாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 09.06.2017 அன்று தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிய துறைமுகம் சாலையில் உள்ள ஒரு எடை மேடை நிலையம் அருகில் நின்ற லாரியையும் லாரியில் இருந்த 400 மூடை முந்திரிக் கொட்டை மூட்டைகளையும் திருடிய வழக்கில் தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் தூத்துக்குடி முள்ளக்காடு சாமி நகர் பகுதியைச் சேர்ந்த செந்தூரப்பாண்டி என்பவரது மகன் சதீஷ்பாண்டியன் (23) என்பவரை கைது செய்தனர். மேற்படி வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் IIல் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கின் சம்மந்தப்பட்ட நபரான சதீஷ் பாண்டியன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால் 20.9.2021 அன்று நீதிமன்றம் இவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இவரை போலீசார் தேடி வந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசீலன் தலைமையிலான போலீசார் 6 மாதமாக தலைமறைவாக இருந்து வந்த எதிரி சதீஷ் பாண்டியன் என்பவரை நேற்று கைது செய்தனர்.