
வல்லநாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு குடிநீர் செல்லும் 4 வது குடிநீர் குழாயில் இரண்டு ஆண்டுகளாக உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையோடு புகார் தெரிவித்துள்ளனர்.
வல்லநாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு குடிநீர் செல்லும் 4 வது குடிநீர் குழாயில் எல்லை நாயக்கன் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டலூரனி விலக்கு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக குடிநீர் வீணாகிறது.
மேலும், குழாயில் இருந்து உடைந்து வெளியேறும் குடிநீரானது அருகில் உள்ள மானாவாரி விளை நிலத்தில் தேங்கி அந்த நிலத்தை பாழ்படுத்தி விடுகிறது என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும்,இது தொடர்பாக மாநகராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என எல்லா பக்கமும் புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை என நொந்து புலம்புகிறார், குடிநீர் வெளியேறி விவசாய நிலத்தில் தேங்கி பயிர்களை பாழ்படுத்தி பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அந்த விவசாய நிலத்திற்குரிய விவசாயிகளில் ஒருவர்.
தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, குடிநீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை அக்கறையோடு தொடங்கும் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், அப்படியே, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உடைப்பு ஏற்பட்டு வீணாக சென்று கொண்டு இருக்கும் குடிநீர் குழாய் பிரச்சனையிலும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் அப்பகுதியினர் விரும்புகின்றனர்.