தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (24.3.2022) மாலை தூத்துக்குடி புதிய பேருந்துநிலையத்தில் உள்ள டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த ஒருவரை அங்கு வந்த மூன்று பேர் கொண்ட மர்மநபர்கள், திடீரென அவரை வெட்டியுள்ளனர். அதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெட்டி படுகொலை செய்யப்பட்ட நபர் தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி செந்திலாம் பண்ணையை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (45). இவர் தற்போது புதுக்கோட்டை அய்யனார் காலனியில் வசித்து வந்தார். இவர் மீது கஞ்சா விற்பனை செய்தது உள்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த கொலை தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முத்துப்பாண்டி கஞ்சா விற்பனை செய்ததில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி, அதன் அடிப்படையிலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
மேலும், இன்று பிற்பகலில் எட்டையபுரம் ரோடு ஆதிபராசக்தி நகர், மச்சாது நகர் 8வது தெருவில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டு இரத்தம் காய்வதற்குள் மாலையிலேயே ஆள் நடமாட்டம் மிகுந்த புதிய பேருந்து நிலையத்தில் இன்னொரு கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.